அடம்பிடிக்கும் அஜித்தின் இயக்குநர்

அடம்பிடிக்கும் அஜித்தின் இயக்குநர்

2 mins read
f0726112-b7b9-43dd-9d77-1250b27393c3
படம்: ஊடகம் -

'தல' அஜித் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தயாரித்த போனிகபூர்தான் இந்தப் படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கொரோனாவிற்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்தன. அதன் பிறகு படக்குழு சுவிட்சர்லாந்தில் சில காட்சிகளைப் படப்பிடித்தது.

அங்கே தல அஜித்தின் 'ஆல்டைம் ஃபேவரைட்' கார் பந்தயம், பைக் பந்தயம் ஆகிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

'வலிமை' படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாகவும் அவருக்கு ஜோடியாக ஹீமா குரேஷியும் நடிக்கிறார்கள்.

மற்றொரு சிறப்பம்சமாக இந்தப் படத்தில் அஜித்துக்கு ஒரு வில்லி இருப்பதாகவும் வில்லியாக நடிக்க பிரபல நாயகியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தல அஜித்துக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் கருவே கார், பைக் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால் வெளிநாடுகளில் பல சண்டைக் காட்சிகள், பந்தயக் காட்சிகள் ஆகியவற்றைப் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், ஊரடங்கு ஆரம்பித்ததால் படம் முடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்து வருவதால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நெருக்கடியில் படக்குழு உள்ளது.

அண்மையில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் வினோத், "முக்கியமான இறுதிக் காட்சியில் அனைத்துலக பந்தய வீரர்கள் கலந்துகொண்டு சண்டையிடும் காட்சிகள் இருக்கின்றன. அதனால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு செய்யாமல் படத்தை முடிப்பது இயலாத காரியம்," என்று தெரிவித்துள்ளார். மற்ற காட்சிகள் தற்பொழுது ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகின்றன.