'பாகுபலி'க்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்களுக்கு கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. அந்த வகையில் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது 'ராதே ஷ்யாம்'.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இத்தாலியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
"ஐரோப்பாவில் நடக்கும் காவியக் காதல்தான் இப்படத்தின் கதை. கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. எனவே தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பை துவங்கியுள்ளோம்.
"படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் பிரபாஸ் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமையும்," என்கிறார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வம்சி.
பூஜா ஹெக்டேவுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு பெரும்தொகை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாம். அவரும் இந்தப் படம் தமக்குப் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று கூறியுள்ளார்.

