'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார் ராஷி கண்ணா.
விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் இடையேயான நடிப்புப் போட்டியைத் திரையில் காணவேண்டும் என மற்ற சராசரி ரசிகர்களைப் போல தானும் விரும்புவதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 'துக்ளக் தர்பார்' படத்தில் சேதுபதியுடன் இணைந்துள்ளார் ராஷி. இப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தமானவர் அதிதிராவ்.
கால்ஷீட் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர் விலகியதை அடுத்து ராஷியை ஒப்பந்தம் செய்தனர். சேதுபதியுடன் அவர் இணைந்துள்ள இரண்டாவது படம் இது.
இந்நிலையில் சேதுபதியும் அவரது நடிப்பும் தமக்கு மிகவும் பிடித்தமானவை என அண்மைய பேட்டியில் ராஷி குறிப்பிட்டுள்ளார்.
"விஜய் சேதுபதியைப் பிடிக்காதவர்கள் இருக்கமுடியாது. நானும் அவர்களில் ஒருவள்தான். எப்போதுமே நடிப்பில் தனது முழுக் கவனத்தையும் செலுத்துகிறார். இதுதான் அவரைப் பிடித்துப்போக முக்கிய காரணம்.
"அதேபோல் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிக்கவேண்டும் என்பதில் ரொம்பவும் மெனக்கெடுவார். மணிரத்னம் சார் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' படத்தை வெகுவாக ரசித்தேன்.
"அதைவிட, அதில் ஒரு குடிகாரராக தனது நடிப்பை சேதுபதி வெளிப்படுத்தி இருக்கும் விதம் இன்னும் அதிகமாக என்னைக் கவர்ந்தது. மிக இயல்பான நடிப்பால் மனதைக் கவர்ந்துவிட்டார்," என ராஷி வாயைத் திறந்தால் ஒரே சேதுபதி புராணமாக இருக்கிறது.
அதன்பிறகு விஜய் சேதுபதி நடித்த அனைத்துப் படங்களையும் தவறாமல் பார்த்து வருகிறாராம். தொடக்கம் முதலே அவர் படிப்படியாக தன் நடிப்பை அழகாக செதுக்கி வந்துள்ளதாகப் பாராட்டுகிறார்.
"சேதுபதியின் அபாரத் திறமையால்தான் அவருக்கான வாய்ப்புகள் தேடிவருகின்றன. சவாலான வேடங்களிலும் அவரால் அனாயாசமாக நடிக்க முடிகிறது.
"அதிலும் குறிப்பாக ஒரே காலகட்டத்தில் நாயகனாகவும் வில்லனாகவும் நடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அவரிடம் அதற்கான திறமையும் தைரியமும் இருக்கின்றன. அதனால்தான் 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன்.
"நான் அடிப்படையில் விஜய் சாரின் தீவிர ரசிகை. அதன்பிறகு சேதுபதிக்கும் ரசிகையாகிவிட்டேன்.
"திரையுலகில் நான் ரசிக்கும் இருவர் ஒரே படத்தில் நாயகனாகவும் வில்லனாகவும் மோதுகிறார்கள்.
"இதை நினைக்கும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு மனதில் மேலும் அதிகரிக்கிறது," என்று சொல்லும்போதே ராஷியின் முகத்தில் ஒருவித படபடப்பையும் பரவசத்தையும் ஒருசேர காணமுடிகிறது.
அண்மைய பேட்டியில் குறிப்பிட்டதுபோல் இணையம் வழி தமிழ் கற்று வருகிறார் இவர்.
இதன்மூலம் தமிழ் சினிமாவில் தம்மை மேலும் வலுவாக நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என நம்புகிறாராம்.
"ஏற்கெனவே பல முறை சொன்னதுதான். தமிழ் ரசிகர்கள் எந்த மொழி நடிகையாக இருந்தாலும் திறமைக்கு மதிப்பு அளிப்பவர்கள்.
"மேலும் தமிழிலேயே பேசி நடித்தால் தங்கள் இதயத்திலும் இடம் கொடுப்பார்கள். எனக்கும் இது தெரியும். எனவேதான் தமிழ் பேச கற்று வருகிறேன்," என்கிறார் ராஷி கண்ணா.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகிகளாக வலம் வருபவர்களில் ராஷி தான் குறைவான சம்பளம் பெறுகிறாராம்.
மேலும், சம்பள விஷயத்தில் அவர் கறார் காட்டுவதில்லை என்றும் நல்ல பெயர் வாங்கி உள்ளார்.
தனது அபிமான கதாநாயகர்களுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும், வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதெல்லாம் ராஷி கண்ணாவின் சில ஆசைகள்.
"தமிழ் ரசிகர்களிடம் நல்ல நடிகை எனப் பெயரெடுத்தால் மற்ற மொழிகளிலும் நடிகைகளின் மவுசு அதிகரிக்கும் என்கிறார் ராஷி.
ராஷி கண்ணா

