தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் 'உங்கள் பணிகள் எனக்கு ஊக்கம் அளிக்கின்றன' என்று பிரபல நடிகரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
விஷால் தற்பொழுது ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார். மிருணாளினி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கும்போது அங்கு வந்த நடிகர் சோனு சூட்டை விஷால் சந்தித்துப் பேசினார். அப்போது இந்தி படத்தில் நடிக்கும்படி விஷாலுக்கு சோனு சூட் அழைப்பு விடுத்தார். அதனை விஷால் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் 'சந்திரமுகி', 'ஒஸ்தி', 'ராஜா', 'கோவில்பட்டி வீரலட்சுமி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சோனு சூட் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். கொரோனா நேரத்தில் மற்ற நடிகர்களைப் போல பயந்து வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காமல் எந்த நடிகரும் செய்யாத பல நல்ல செயல்களை நேரடியாகச் சென்று செய்துள்ளார் சோனு சூட். இவர் படங்களில் வில்லனாக நடித்தாலும் உண்மையில் நாயகனாக உயர்ந்து நின்றார். அவரைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.
அவரைப் பற்றி விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "அற்புதமான ஆன்மா நீங்கள். கடவுள் மனித இனத்திற்கு தந்த பரிசு நீங்கள். அறிமுகம் இல்லாத குடும்பங்களுக்கு நீங்கள் செய்த சமூக பணிகள் எனக்கு ஊக்கம் அளித்துள்ளன. தொடர்ந்து இதுபோல் சிறப்பாக செயல்படுங்கள்," என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தையடுத்து விஷால் 'ஈட்டி' படத்தின் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் ரவி அரசு அதர்வா நடித்த 'ஈட்டி' திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார். ஓட்டப்பந்தயத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. பின்னர் ஜி.வி.பிரகாஷை வைத்து 'ஐங்கரன்' என்ற படத்தை எடுத்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இயக்குநர் ரவி அரசுடன் விஷால் இணையும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஷால் அண்மைகாலமாக பல இளம் இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார். எம்.எஸ்.ஆனந்தன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில் 'சக்ரா' படத்திலும் நடித்துள்ளார்.
'துப்பறிவாளன் 2' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் மிஷ்கின்தான் முதலில் இயக்கினார். பின்னர் இருவருக்கும் மோதல் ஏற்படவே மிஷ்கின் விலகினார். அதை யடுத்து விஷாலே அப்படத்தை இயக்கி னார். படம் 'ஓடிடி' யில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.