பெண்கள் எத்தகைய சூழ்நிலையிலும் தைரியமாக இருக்கவேண்டும் என்கிறார் நடிகை ராய்லட்சுமி. தமது தந்தை அவ்வாறுதான் தம்மை வளர்த்துள்ளதாகவும் கூறுகிறார்.
இவரது தந்தை காலமாகிவிட்டார். அவரது மறைவால் மிகுந்த துயரத்தில் மூழ்கி இருப்பதாகக் கூறியுள்ளார் நடிகை ராய்லட்சுமி.
எவ்வளவோ முயன்றும் தந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது என தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை தைரியமான பெண்ணாக வளர்த்தெடுக்க தந்தை மிகவும் மெனக்கெட்டதாகவும் அவர் எதற்காக அதைச் சாதிக்க முயன்றார் என்பதற்கான காரணம் இப்போது புரிகிறது என்றும் தமது பதிவில் ராய்லட்சுமி தெரிவித்துள்ளார்.
"சிறுவயது முதலே வலிமையான பெண்ணாக இருக்கவேண்டும் என்று அப்பா சொல்வார். மேலும் தனித்திருந்தாலும் சாதிக்கவேண்டும் என்று அறிவுறுத்துவார்.
"என்றாவது ஒருநாள் தாம் இந்த உலகத்தை விட்டு மறையும்போது அதை எதிர்கொள்வதற்கு தைரியம் எனக்குத் தேவைப்படும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.
"அதனால்தான் அதற்கேற்ப என்னைத் தயார்ப்படுத்தி இருக்கிறார். இப்போதுதான் அவரது செயலுக்கான அர்த்தம் எனக்குப் புரிகிறது," என்று வருந்துகிறார் ராய்லட்சுமி.
தந்தையை இழந்த வருத்தம் மனதை வாட்டினாலும், அவர் இந்தப் பூமியைவிட நல்லதொரு இடத்தில் எந்தவித வலியும் வேதனையும் இன்றி நன்றாக இருப்பார் என நம்புவதாகக் கூறுகிறார். மேலும், தாம் எதையெல்லாம் சாதிக்கவேண்டும் என தந்தை விரும்பினாரோ, தன்னால் நிச்சயம் சாதிக்கமுடியும் என்றும் கூறியுள்ளார்.
எனக்காகத் துடித்த ஒரு தங்கமான இதயம் தனது துடிப்பை நிறுத்தியதும் கடுமையாக உழைக்கும் கரங்கள் திடீரென ஓய்வுக்கு வந்ததும்தான் தமது வாழ்க்கையில் இருண்ட தருணம் என்றும் தந்தை மீதான தமது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் ராய்லட்சுமி.
அவரது இந்தப் பதிவைப் படித்த திரையுலகத்தினரும் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்துவரும் ராய் லட்சுமிக்கு இந்தியிலும் பெயரெடுக்க ஆசையாம். எனினும் தென்னிந்திய படங்களுக்குத்தான் முன்னுரிமை அளிப்பாராம்.
தற்போது மூன்று புதுப்படங்களில் நடித்து வருபவர் கொரோனா பாதிப்பு காரணமாக திரையுலகத்தினர் சிரமப்படுவது வருத்தமளிப்பதாகச் சொல்கிறார். எனவே, தமது சம்பளத்தில் கணிசமான அளவைக் குறைத்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளாராம். இந்த இக்கட்டான நேரத்தில் ஒருவருக்கு உதவிகரமாக இருக்கவேண்டும். மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும் என்றும் ராய்லட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

