'லேடி சூப்பர் ஸ்டார்' என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுக்காக தளபதி விஜய்யிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை நடிகர் விஜய் நிராகரித்துவிட்டார். அதனால் நயன்தாரா வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'மாஸ்டர்'.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய் எந்த அதிர்ஷ்டசாலியின் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் இயக்குநர் நெல்சன் திலிப் குமார்தான் அந்த அதிர்ஷ்டசாலி என்று தெரியவந்துள்ளது.
இவர் அண்மையில் கதை எழுதி, இயக்கிய 'கோலமாவு கோகிலா' நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்துடன் சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். இவர்தான் விஜய்யின் அடுத்த படத்திற்கு கதை, இயக்கம் எல்லாம் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் தான் விஜய் நெல்சனைத் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணகர்த்தா.
இயக்குநர் நெல்சன் 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்குவதற்கு முன்பு சிம்புவை வைத்து 'வேட்டை மன்னன்' என்ற படத்தை எடுத்து வந்தார். ஆனால் அந்தப் படம் பாதியில் நின்றுபோனது.
தற்போது 'வேட்டை மன்னன்' படத்தின் கதையைத்தான் விஜய்யை வைத்து எடுக்க இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்தப் படத்தில் விஜய் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் விஜய்யின் படத்திற்கான வேலைகளில் உடனடியாக இறங்க இருக்கிறார் நெல்சன்.
'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் உருவாக இருந்த விஜய்யின் படத்தை முதலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப்போகிறார் என்றும் அது 'துப்பாக்கி' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில் இயக்குநரே சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகினார்.
அதன்பின் நடிகை நயன்தாரா தனது காதலர் ஒரு நல்ல கதை வைத்திருப்பதாகவும் அதைக் கேட்குமாறு விஜய்யிடம் சிபாரிசு செய்தாராம். அதற்கு விஜய் எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாக இருந்துவிட்டாராம்.
இந்நிலையில் நயன்தாரா 'நிழல்' என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் பிரபல நடிகரான குஞ்சாகோ பூபன் நடிக்கின்றார்.
ஏழு மாதங்களுக்குப் பிறகு இவர் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். படப்பிடிப்பு கொச்சி கடற்கரையில் நடைபெற்றபோது எடுத்த புகைப்படங்கள் இணையத் தளங்களில் வெளியாகியுள்ளன.
நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு 'ஹாட் ஸ்டார்' இணையப் பக்கத்தில் வெளியாக இருக்கும் படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி இருக்கும் ஆர்ஜே பாலாஜியிடம் "நயன்தாராவுடன் நடிகராகவும் இயக்குநராகவும் பணிபுரிந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்," என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஆர்ஜே பாலாஜி "என் படத்தின் நாயகி 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா 16 ஆண்டுகளாக முன்னணியில் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது எளிமைதான்.
"வேலையில் அவர்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு, எந்த வேலை செய்தாலும் அது சிறப்பாக வருவதற்கான அவரது விடாமுயற்சி ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன. படப்பிடிப்பில் அவர்களோடு இணைந்து வேலை செய்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களாக இருக்கும். இன்று இருப்பதுபோல் தொடர்ந்து அவர் முழு ஒத்துழைப்பையும் தந்து நடித்தால் இன்னும் பல ஆண்டுகளுக்கு நயன்தாரா முன்னணி நாயகியாகத்தான் இருப்பார்," என்றார்.

