'ரஜினி குறித்து அவ்வாறு பேசியிருக்கக்கூடாது'

'ரஜினி குறித்து அவ்வாறு பேசியிருக்கக்கூடாது'

2 mins read
96c38b3a-915e-4492-b501-805f21fc141e
படம்: ஊடகம் -

நடிகர் ஆர்ஜே பாலாஜி "ரஜினி குறித்து அளித்த பேட்டியில் நான் அப்படி பேசியிருக்கக் கூடாது," என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன்' என்ற படத்தை இயக்கி அதில் நடித்தும் இருக்கிறார். இப்படம் தீபாவளி அன்று 'டிஸ்னி ஹாட் ஸ்டார்' என்ற இணையத் தளத்தில் வெளியாக இருக்கிறது.

அதையடுத்து நேற்று முன்தினம் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது "ரஜினி சாரைப் பற்றி நீங்கள் அளித்த பேட்டி நினைவிருக்கிறதா?" என்று ரஜினி ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஆர்ஜே பாலாஜி "நான் சூப்பர் ஸ்டாரின் ரசிகன். சின்ன வயதில் ரஜினி நல்ல மனிதன் என்று என் தாத்தா சொன்னார். அது இன்று வரைக்கும் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

"அவர் அற்புதமான மனிதர். 'தளபதி'யில் இருந்து 'தர்பார்' வரைக்கும் எனக்கு அவரின் காட்சிகள் மனப்பாடம். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு பேட்டி அளித்திருந்தேன். அதில் 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. மேலும் அவர் அரசியலுக்கு வருவது காலத்தின் கையில், ஆண்டவன் கையில் என்று 25 ஆண்டுகளாக கூறி வருகிறார்.

"நான் தீவிரமான 'சூப்பர் ஸ்டார்' ரசிகன் என்ற முறையில் சொல்கிறேன். அவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ரஜினிகாந்த் அவரின் படம் வெளியாகும்போது மட்டும் அரசியல் குறித்து பேசுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

"அவர் படம் வெளியாகும்போது உலகமே அதைக் கொண்டாடுகிறது. அப்படி இருக்கும்போது அவர் படத்திற்காக அரசியலுக்கு வருகிறேன் என்கிறார் எனக் குறிப்பிடுவது தவறு. ஆனால் 99.99 விழுக்காடு ரஜினி, அரசியலுக்கு வர மாட்டார்' என்று கூறியிருந்தேன். நான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது. நான் அதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன்," என்று கூறினார்.

இவரின் 'மூக்குத்தி அம்மன்' படத்தில் அதிகமாக அரசியல் வசனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.