ஏராளமான படங்களில் நடனப் பயிற்சியாளராகப் பணியாற்றியவர் பிருந்தா.
கலா மாஸ்டரின் தங்கை என்ற அடையாளம் இருந்தாலும் பிருந்தாவின் தனித்திறமைகள்தான் அவரைத் திரையுலகில் இத்தனை ஆண்டு காலம் நீடிக்க வைத்துள்ளது. தற்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார்.
"என் குழந்தைகளுக்கு அன்பான அம்மா, என் அக்காக்களுக்கு செல்ல தங்கை. இதுதான் எனது உலகம். எதற்காகவும் யாருக்காகவும் இதை விட்டுக்கொடுக்க மாட்டேன்," என்கிறார் பிருந்தா.
சினிமாவில் சாதிக்கவேண்டும் எனும் கனவுடன் பிருந்தா உள்ளிட்ட ஏழு மகள்களுடன் சென்னைக்கு வந்துள்ளார் அவரது தாய் சரோஜினி. அவரால்தான் தமது திறமைகள் வெளிப்பட்டதாகச் சொல்கிறார் பிருந்தா.
"எங்கள் தந்தை கல்யாண சமையலில் மிகுந்த திறமைசாலி. பல பெரிய குடும்பங்களின் பிரம்மாண்ட திருமணங்களுக்கு அவரது கைவண்ணத்தில்தான் விருந்துகள் படைக்கப்படும். அப்பா ஈரோட்டில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டபோது, அம்மாதான் எங்களைக் கவனித்துக்கொண்டார். ஈரோட்டில் பெரிய நடனப்பள்ளிகள் கிடையாது. அதனால் தனி ஆளாக மகள்களுடன் சென்னக்கு வந்தார்.
"கிரிஜா அக்கா, கலா அக்கா என அனைவரும் நடனப்பள்ளியில் சேர்ந்தோம். அதன் பிறகு கிரிஜா அக்கா, பிரபல திரைப்பட நடன ஆசிரியர் ரகுராம் மாஸ்டரை மணந்தார். மற்ற அக்காக்கள் அவரிடமே உதவியாளர்களாக சேர்ந்து வேலை பார்த்தபடியே நடனமும் கற்றுக்கொண்டனர். இப்படித்தான் நாங்கள் சினிமாவுக்குள் நுழைந்தோம். படிப்படியாக முன்னேறினோம்.
"எந்நேரமும் வேலை, வேலையை விட்டால் வீடு என்று இருந்தால்தான் அம்மாவிடம் நல்ல பெயர் வாங்க முடியும். வீட்டுக்குத் தேவையின்றி தாமதமாக வந்தால் அம்மாவுக்குப் பிடிக்காது. அதேசமயம் வேலை காரணமாக தாமதம் என்றால் ஒன்றும் சொல்லமாட்டார். எங்களுடைய இந்த வளர்ச்சிக்கு அவரது வழிகாட்டுதலும் தைரியமும்தான் காரணம்.
"அவரைக் கண்டால் என் தோழிகள் கூட பயப்படுவார்கள். அதேசமயம் நடிகைகள் குஷ்பு உள்ளிட்ட பலர் அம்மாவின் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். புன்னகை மன்னன் படத்தின் படப்பிடிப்பின்போது கலா அக்காவுக்கு காலில் அடிபட்டது. அதனால் கிரிஜா அக்கா என்னைப் பணியாற்றச் சொன்னார். நான் அதிகம் பேசமாட்டேன். மேலும் யாரையும் தொட்டு நடனமாட முடியாது என்றும் கூறிவிட்டேன். அதன் பிறகு ரகுராம் மாஸ்டரிடம் 7 ஆண்டுகள் பணியாற்றிய போதுதான் திரைப்பட நடனம் குறித்த அனைத்தும் தெரிய வந்தது,
"நான் நடன இயக்குநராகப் பணியாற்றிய முதல் படம் 'நந்தவனத் தேரு'. அதையடுத்து 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா' பாடலுக்கு நடனம் அமைத்தேன். குஷ்புவும் சுந்தர் சி.யும் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தனர்.
" அதன் பிறகு பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் பணியாற்றி, இன்று பிருந்தா மாஸ்டர் என்றால் ரசிகர்கள் உடனே அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறேன்," என்று சொல்லும் பிருந்தா தற்போது இல்லத்தரசியாகவும் நிறைவான வாழ்க்கை அமைந்திருப்பதாகச் சொல்கிறார்.
திடீரென ஒருநாள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தாயார் உத்தரவிட மறு பேச்சின்றி அதற்கு சம்மதித்துள்ளார்.
"என் கணவர் பெயர் கோபால். திருமணத்துக்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டோம். அவர், நடிகர் ஜெயராமின் மனைவிக்கு உறவினர். நெருக்கமான உறவினர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைத்திருந்தோம்.
"எனக்கு என் குடும்பம்தான் உலகம். அக்காள்கள் எல்லோரும் இந்தத் தங்கை மீது பாசம் காட்டுகிறார்கள். ஊரடங்கின்போது தினமும் அவர்கள் வீட்டில் இருந்துதான் உணவு வருகிறது. இப்போது பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுகிறேன்," என்று சொல்லும் பிருந்தா, கடைசியாகப் பணியாற்றிய படம் 'அண்ணாத்த'. பல விருதுகளைப் பெற்றிருப்பவர் சினிமாவில் வெற்றி பெற கடும் உழைப்பு தேவை என்கிறார்.
"சினிமாவில் நேரமும் காலமும் மிகவும் முக்கியம். சரியான நேரத்துக்கு வேலையைச் செய்து முடித்தாலே பாதி வெற்றி கிடைத்த மாதிரிதான்," என்கிறார் பிருந்தா.

