'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சிம்பு தற்பொழுது உடல் இளைத்து முன்பு இருந்தது போலவே காட்சியளிக்கிறார்.
உடல் பெருத்துப்போய் விட்டதால் சிம்பு இனிமேல் படங்களில் நடிக்கமாட்டார் என்று கோலிவுட்டே முடிவுக்கு வந்த பிறகு அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பீனிக்ஸ் பறவையைப்போல எழுந்து வந்துள்ளார் சிம்பு.
மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிம்புவின் ஒவ்வொரு அசைவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது.
சிம்புவின் சினிமா வாழ்க்கை முடிந்தது என்று கூறியவர் களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெறித்தனமான உடற்பயிற்சி மூலம் தனது எடையை 30 கிலோ வரை குறைத்துக் காட்டியுள்ளார்.
அனைத்து வலைத்தளங்களிலும் நுழைந்து அதிகாரப்பூர்வமாக பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் 30 நாளில் அசுர வேகத்தில் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. அடுத்த ஓரிரு தினங்களில் அந்தப் படத்திற்கான குரல் பதிப்பையும் முடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
சிம்புவின் சமீபத்திய விறுவிறுப்பான நடவடிக்கை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் 'ஈஸ்வரன்' படத்தில் அறிமுகமாகும் காட்சி 'காலா' படத்தில் 'சூப்பர் ஸ்டார்' அறிமுகக் காட்சியைப்போல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இசையும் அதைப்போலவே இருப்பதால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் சிறிது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 'ஈஸ்வரன்' படம் பொங்கல் 2021க்கு வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் ஒரு கிராம பின்னணி கதை. பாசம், அன்பு, நகைச்சுவை, சண்டை கலந்த கலவையாக இருக்கும். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். பாரதிராஜா, பாலா சரவணன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இதற்கிடையில், வெங்கட் பிரபுவுடன் 'மாநாடு' என்ற அரசியல் கலந்த 'த்ரில்லர்' படத்திற்கான பணிகளைச் சிம்பு மீண்டும் தொடங்கியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகின்றன.
சிம்பு 'மாநாடு படத்திற்காக கிராமத்து இளைஞனாக வித்தியாசமான தோற்றத்துடன் நடித்து வருகிறார். மேலும் அவரது புதிய தோற்றத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

