முன்னணி நாயகர்கள் நடிக்கும் படம் என்றால் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவற்றை ஏற்று நடிக்க தாம் சற்றும் தயங்குவதில்லை என்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால்.
அஜித்தின் தீவிர ரசிகை என்பதால்தான் 'விஸ்வாசம்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ரஜினியுடன் ஒரு படத்திலாவது என்ற கனவு 'காலா' மூலம் நிறைவேறியதாகச் சொல்கிறார்.
தற்போது 'சின்ட்ரெல்லா', 'ஆயிரம் ஜென்மங்கள்', 'டெடி', 'அரண்மனை-3' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி.
அண்மைக் காலமாக இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் வித்தியாசமான புகைப்படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனம் ஒன்றில் அமர்ந்திருப்பது போல் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், சாக்ஷியின் கவர்ச்சியிலும் அழகிலும் சொக்கிப் போனதாக பின்னூட்டமிட்டு வருகிறார்கள்.
நடிகை மாளவிகா மோகனனைப் போலவே இவருக்கும் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது என்றால் ரொம்பப் பிடிக்குமாம்.
"சாதாரண பைக்குகளின் மீது எனக்கு அதிக நாட்டமில்லை. சூப்பர் பைக் வகைகள்தான் ரொம்பப் பிடிக்கும். பெங்களூருவில் என் கூட்டாளி ஒருவரிடம் நவீன வாகனங்கள் உள்ளன.
"அங்கு செல்லும்போதெல்லாம் அவரிடமிருந்து புதிய பைக்கைப் பெற்றுக்கொள்வேன். குறைந்தது மூன்று நாட்களாவது அதில் தன்னந்தனியாகச் சுற்றித் திரிவேன்," என்று சொல்லும் சாக்ஷி எம்பிஏ பட்ட மேற்படிப்பை முடித்தவர்.
சிறு வயது முதலே இந்திய ஆட்சிப் பணியில் (ஐஏஎஸ்) தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்துள்ளது. ஆனால், கல்லூரியில் சேரும் சமயத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை கண்ட வளர்ச்சி காரணமாக அந்தத் துறையில் கவனம் செலுத்த நேரிட்டதாம்.
"கடைசியில் அந்தத் துறையிலும் நான் பணியாற்றவில்லை. கல்லூரியில் படித்தபோதே விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. பிறகு நடிப்பின்மீது ஆர்வம் ஏற்பட்டது. அதில் தீவிர கவனம் செலுத்தினேன்.
"என் விருப்பத்தை அறிந்த பெற்றோர் ஊக்கமளித்தனர். அப்பா 18 லட்சம் ரூபாய் செலவழித்து அமெரிக்காவுக்கு அனுப்பி நடிப்புப் பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். எல்லாம் நல்லவிதமாக அமைந்ததால் உங்கள் முன் நடிகையாக நிற்கிறேன்," என்கிறார் சாக்ஷி.
கொரோனா கிருமித்தொற்றால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் இதன் காரணமாக மக்களிடம் நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடுபவர், இக்கட்டான சூழ்நிலைகளில் அனைவரும் நேர்முறையாகச் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
"மக்கள் மனதில் புதுவித நம்பிக்கையையும் ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் விதைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அது மிகவும் அவசியம்.
"அதனால்தான் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்," என்று சொல்லும் சாக்ஷி, ரஜினி, அஜித்துடன் நடித்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது என்கிறார்.
இருவருமே பழகுவதற்கு மிக எளிமையானவர்கள் என்றும் சிறுவயது முதலே அஜித் மீது தமக்கு ஒருவித ஈர்ப்பு உண்டு என்றும் சொல்லிச் சிரிக்கிறார்.
"அஜித் சார் நடித்த படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவேன். 'விஸ்வாசம்' படத்தில் தனது கதாபாத்திரம் மிகச் சிறியதுதான் எனினும் அஜித் படத்தில் ஒருமுறையாவது தலைகாட்டிவிட வேண்டும் என்ற ஆசைக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
"படப்பிடிப்பில் முதல்முதலாக சந்தித்தபோது 'வெல்கம் சாக்ஷி ஜி' என்று சிரித்தபடி வரவேற்றார். அவ்வளவு பெரிய நடிகர் என்னை மதித்து வரவேற்றது நெகிழ வைத்தது.
"என் அம்மா 'தால்பாட்டி சுர்மா' என்ற உணவு வகையைத் தயாரிப்பதில் கெட்டிக்காரர். இதை அஜித்திடம் ஒருமுறை சொல்லியிருந்தேன்.
"இந்நிலையில் ஒருநாள் அவரே அம்மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அதை எப்படிச் செய்யவேண்டும் என்று விவரமாகக் கேட்டறிந்துள்ளார்.
"பிறகு படப்பிடிப்பு தளத்தில் அவரே தன் கையால் 'தால்பாட்டி சுர்மா'வை தயாரித்து அனைவருக்கும் பரிமாறினார். என் அம்மாவின் கைப்பக்குவம் அஜித் சாரிடமும் இருப்பதைக் கண்டு உண்மையாகவே மலைத்துப்போனேன்.
"அதேபோல் 'காலா' படப்பிடிப்பின்போது ரஜினி சார் அனைவரிடமும் அன்பு காட்டுவதைப் பார்த்தேன். அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளின்போது சக நடிகர்களின் நடிப்பை வெகுவாகப் பாராட்டுவார்.
"அருமை, அபாரம் என்று அவர் பாராட்டுவதைக் கேட்கும்போது உற்சாகமாக இருக்கும்," என்று சொல்லும் சாக்ஷி, அடுத்து 'விஜய் 65' படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
" இப்படியொரு தகவல் நானும் கேள்விப்பட்டேன். இப்போது வரை இது வெறும் வதந்திதான். ஒருவேளை இந்தத் தகவல் உண்மையாக மாறினால் என்னைவிட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இருக்கமுடியாது.
"அத்தகையதொரு வாய்ப்புக்காகவே இத்தனை நாட்களாகக் காத்திருக்கிறேன். விஜய் சாருடன் நடிக்க எத்தனை நாட்கள் கால்ஷீட் ஒதுக்கக் கேட்டாலும் தயங்கமாட்டேன்," என்கிறார் சாக்ஷி அகர்வால்.

