திருமணத்துக்குப் பிறகு ஆர்யா தரப்பில் இருந்து அதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும் சத்தமின்றி சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'சார்பட்டா' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஆர்யா. இது குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக தீவிர குத்துச்சண்டைப் பயிற்சி மேற்கொண்டுள்ளார் ஆர்யா.
முன்பு சென்னையில் ஆங்கிலக் குத்துச்சண்டை என்பது பிரபலமாக இருந்தது. அதை மையமாக வைத்து இரண்டு பரம்பரைக்குள் நடக்கும் சண்டையில் யார் சாதித்துக் காட்டுகிறார்கள் என்பதை விவரிக்கிறது 'சார்பட்டா'.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் பின்பகுதியில் இருக்கும் குடியிருப்புதான் கதைக்களம்.
'சார்பட்டா' என்றால் நான்கு கத்திகளைக் கொண்டு போடும் சண்டையைக் குறிக்குமாம். இது உருது வார்த்தை என்றும் 'சர்' பட்டம் பெற்ற ஒருவர் முதன்முதலாக இவ்வாறு சண்டையிட்டார் என்றும் அதனால் வழக்கு மொழியில் 'சார்பட்டா' என்று மாறியதாகவும் கூறப்படுகிறது.
"இப்படி நிறைய தகவல்களைக் கேள்விப்பட்டோம். எனினும் இந்த வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இங்கு தமிழர் குத்துச்சண்டை வழக்கத்தில் இருந்திருக்கிறது. அதில் முகத்தில் மட்டுமே குத்துவார்கள். பிறகுதான் அது ஆங்கிலக் குத்துச்சண்டையாக மாறிவிட்டது," என்கிறார் பா.ரஞ்சித்.
1995 வரை வடசென்னையில் இந்த விளையாட்டு மிகத்தீவிரமாக விளையாடப்பட்டு வந்ததாக குறிப்பிடுபவர், இந்த விளையாட்டு ஒரு பெரிய கலாசாரம் என்கிறார்.
"அதை முழுமையாக இந்தப்படத்தில் சொல்லிவிடமுடியாது. இரண்டரை மணி நேரத்துக்குள், என்னால் சொல்ல முடிந்த அளவுக்குச் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.
"இதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கவேண்டும் என்கிற ஆர்வமும் இருக்கிறது. ஏனென்றால், இதில் சொல்லப்பட வேண்டிய கதைகள் இன்னும் நிறைய இருக்கின்றன," என்று சொல்லும் ரஞ்சித், இந்த கதைக்கு ஆர்யா தான் பொருத்தமான நாயகன் என்கிறார்.
'மெட்ராஸ்' படம் வந்தபோதே இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றலாம் என்று ஆர்யா கூறியிருந்தாராம். அதற்கான நேரம் இப்போதுதான் அமைந்திருப்பதாக இருவருமே ஒருசேர சொல்கிறார்கள்.
"தனது புதுப்படத்துக்கு குத்துச்சண்டை வீரருக்குரிய உடல்வாகு கொண்ட நடிகர் ரஞ்சித்துக்குத் தேவைப்பட்டார். அப்போது அவருக்கு என் நினைவு வந்திருக்கிறது. நான் பொருத்தமாக இருப்பேன் எனக் கருதி ஒப்பந்தம் செய்தார்.
"அந்தப் படத்தில் நாயகனின் பெயர் கபிலன். என்னால் முடிந்தவரை கடுமையாக உழைத்திருக்கிறேன்," என்கிறார் ஆர்யா.
படத்துக்காக ரஞ்சித் கூறியது போல் தன் உடல்வாகை கட்டுக்கோப்பாக வடிவமைத்துக்கொண்டாராம். மேலும், குத்துச்சண்டை கற்றுக்கொண்டதுடன் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல்மொழியையும் கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளதாக ஆர்யாவை பாராட்டுகிறார் ரஞ்சித்.
'சார்பட்டா'வில் நாயகியாக நடிப்பவர் துஷாரா. கதைப்படி அவரது பெயர் மாரியம்மா.
தமிழக கிராமங்களில் பார்க்கும் தைரியமான, துணிச்சலான பெண்ணாக நடித்திருப்பதாகவும் துஷாராவின் நடிப்பு அனைவரையும் கவரும் என்றும் உத்தரவாதம் அளிக்கிறார் ரஞ்சித்.
"பிரபலமான நடிகர்கள், பிரபலமாகப்போகும் நடிகர்கள் என நிறைய பேர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
"பசுபதி சார் ரங்கன் வாத்தியார் என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார்.
"கலையரசன், ஜான் விஜய், சந்தோஷ், அனுபமா என மேலும் பலர் முக்கியமான வேடங்களில் தோன்றுகிறார்கள்.
"ஒளிப்பதிவாளர் முரளி சார், கலை இயக்குநர் ராமலிங்கம், 'மெட்ராஸ்' படத்தின்போது துணை படத்தொகுப்பாளராக இருந்து இப்போது 'பரியேறும் பெருமாள்', 'மூக்குத்தி அம்மன்' எனப் பல படங்களில் பணியாற்றிய செல்வா உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.
"இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல கதையையும் பல முக்கிய தகவல்களையும் கொண்டு சேர்த்த மனநிறைவு கிடைக்கும்," என்கிறார் பா.ரஞ்சித்.

