மர்ம ஆசாமியைப் பிடிக்க திட்டம் தீட்டிய நாயகன்; கதையல்ல நிஜம்

மர்ம ஆசாமியைப் பிடிக்க திட்டம் தீட்டிய நாயகன்; கதையல்ல நிஜம்

3 mins read
bd9cba76-b33b-449a-bcbe-4ca1448d974f
படம்: தமிழக ஊடகம் -

விஜய் தேவரகொண்டா தென்னிந்திய திரையுலகில் பெரிதும் விரும்பப்படும் ஒரு முன்னணி நாயகன் ஆவார். இவருடைய பெயரில் மர்ம ஆசாமி ஒருவர் பெண்களிடம் தவறாக நடந்ததை அறிந்த விஜய் தேவரகொண்டா திட்டம் தீட்டி அவரைப் பிடிக்க போலிசுக்கு உதவி இருக்கிறார்.

தெலுங்கு திரையுலகின் இளம் நாயகர்களில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி பெறவே ரசிகர்களின் ஏகபோக வரவேற்பைப் பெற்றார். இப்போது அதைவிட பரபரப்பான காரியம் ஒன்றைச் செய்து 'சோசியல் மீடியா கிங்'காக மாறிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களுடைய பெயரைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

தெலுங்கு முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா பெயரிலும் போலி கணக்கு ஒன்றைத் துவங்கிய ஒரு மர்ம ஆசாமி, அதன் மூலம் பல பெண்களுக்கு அழைப்புக் கொடுத்து பேசத் துவங்கியுள்ளார்.

அதை உண்மை என்று நம்பி, அவரிடம் பெண்கள் பலர் பேசத் தொடங்கி உள்ளனர். மேலும் அந்த மர்ம ஆசாமி, பெண்களிடம் ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசத் தொடங்கியுள்ளார். இந்த தகவல் விஜய் தேவரகொண்டாவின் நண்பர் மூலம் அவரின் கவனத்திற்குச் சென்றது.

அதிர்ச்சி அடைந்த விஜய் தேவரகொண்டா தன்னுடைய மேலாளர் உதவியுடன் ஹேமா என்ற பெயரில் அந்த மர்ம ஆசாமியைத் தொடர்பு கொள்ளச் செய்து அதன் மூலம் மர்ம ஆசாமியின் விவரங்களை எடுத்து அதை ஆதாரமாகக்கொடுத்து 'சைபர் கிரைம்' போலிசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், போலிசார் தற்போது அந்த மர்ம ஆசாமி பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுவரை இந்த போலி கணக்கின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அந்த ஆசாமி ஏமாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டகிராமில் 8 மில்லியன் பேர் தன்னைப் பின்பற்றுவதாகக் கூறியுள்ளார்.

தென்னிந்தியாவிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எந்த மொழி நடிகர்களுக்கும் கிடைக்காத ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவிற்கு கிடைத்துள்ளனர். இந்த இமாலய சாதனையை இவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதைத் திருடிய விஜய் தேவரகொண்டா தற்பொழுது இயக்குநர் பூரி ஜெகநாத்துடன் 'ஃபைட்டர்' படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். அதனால் தனது உடல் எடையை குறைத்து கட்டுமஸ்தானாக ஆவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபி நடிக்க இருக்கிறார்.

இப்படம் தந்தை-மகனுக்கிடையே உள்ள உணர்வை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இது கிட்டத்தட்ட தமிழில் வெளியான 'எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி' படத்தின் கதையைப் போன்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

மலையாளத்தில் முன்னணி நாயகனாக இருக்கும் சுரேஷ் கோபி அண்மைக் காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கி உள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இப்படத்திற்கு பலம் என்றால் சுரேஷ் கோபி அப்பாவாக நடிப்பது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறுகின்றனர் படக்குழுவினர்.