நட்பில் உள்ள அழகு வேறு எதிலும் இல்லை என்கிறார் நடிகர் பால சரவணன். இவர் 'பண்ணையாரும் பத்மினியும்', 'டார்லிங்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மகன் பொறியியலாளராக வேண்டும் என்பதுதான் இவரது பெற்றோரின் விருப்பமாம். ஆனால், தமக்கு நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்.
"நான் பள்ளி, கல்லூரியில் படித்தபோது எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் எனது தோழி சூர்யா. எங்கள் வீட்டில் அனைவருடனும் பாசமாகப் பழகுவார்.
"பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர நான் பொறியியல் கல்லூரிக்குச் சென்றேன். இருவரும் தினமும் கைபேசியில் பேசிக்கொள்வோம்.
"ஒருநாள் சூர்யாவைத் தொடர்புகொண்டபோது அவரது கல்லூரித் தோழி ஹேமாவதி என்பவர் எடுத்துப் பேசினார். நீங்கள் யார் என்று அவர் கேட்க, பதிலுக்கு நீங்கள் யார் என்று நான் கேட்க, இருவருக்குமிடையே சிறிய வாக்குவாதம் மூண்டது. இதனால் அவர் அழத் தொடங்கி விட்டார்.
"சூர்யாவுக்கு என் மீது கோபம். அதனால் ஹேமாவதியிடம் வருத்தம் தெரிவித்ததுடன் மீண்டும் ஒருமுறை பேசி அவரைச் சிரிக்க வைத்தேன். இதுதான் எங்களுக்கு இடையேயான முதல் தொடர்பு. அதன்பிறகு ஹேமாவதியும் நெருங்கிய தோழியானார். நாளடைவில் அது வெறும் நட்பு மட்டுமல்ல, காதல் என்றும் புரிந்தது," என்று புன்னகைக்கிறார் பால சரவணன்.
கல்லூரிப் படிப்புக்கு மத்தியில் 'கனா காணும் காலங்கள்' தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் நல்ல நடிகராக அடையாளம் காணப்பட்டு திரைத்துறையிலும் கால் பதித்தார் இவர். ஆனால், ஹேமாவதியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனினும் இந்த எதிர்ப்பையும் மீறி அவரைத் திருமணம் செய்து கொண்டாராம்.
"பிறகு வெளிநாட்டில் இருந்த ஹேமாவதியின் தந்தை நாடு திரும்பினார். அவரைச் சந்திக்கச் சென்றபோது மகளை அரவணைத்துக் கண்ணீர் விட்டார்.
"அவரே மீண்டும் எங்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் செய்து வைத்தார். எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவகையில் எனது வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது என நினைக்கிறேன். என் தோழியைத் தொடர்புகொள்ளப் போக அதை வேறு யாரோ எடுத்துப் பேச அதுவே என் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறது.
"திருமணமாகி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் ஹேமாவை இன்னும் என் காதலியாகவே நினைக்கிறேன். இப்போதும்கூட தொலைபேசியில் பேசும்போது பழைய அழகான காலங்களுக்குள் எங்களையும் அறியாமல் நுழைந்துவிடுவோம்," என்று காதலுடன் பேசுகிறார் பால சரவணன்.

