'ஏதென்ஸ்' அனைத்துலக விமான நிலையத்தில் தீபிகா படுகோனின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பிரபல 'பாலிவுட்' நடிகை தீபிகா படுகோன். தமிழில் ரஜினியுடன் 'கோச்சடையான்' படத்தில் நடித்திருந்தார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் தீபிகா படுகோன், சில மாதங்களுக்கு முன் போதைப்பொருள் வழக்கில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிசார் முன் விசாரணைக்கு முன்னிலையானார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவருடன் சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் அனைத்துலக விமான நிலையத்தில், 'நிஜமான புன்னகைகள்' என்ற தலைப்பில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி மறுத்திருந்த அந்நாட்டு அரசு, தற்போது அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து அங்கு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் அமெரிக்கா, ஆப்ரிக்கா உட்பட
உலகின் பல்வேறு நாட்டு பிரபலங்களின் சிலைகளும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தியா சார்பாக, நடிகை தீபிகா படுகோனின் மார்பளவுச் சிலையும் அந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. கறுப்பு நிற மார்பிள் கல்லில் தீபிகாவின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 'பாலிவுட் நடிகை, ஏதென்ஸ் விமான நிலையத்தில் புன்னகைக்கிறார்' என்று எழுதப்பட்டுள்ளது.
இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பலரும் இந்தப் படத்தை பகிர்ந்து வருகின்றனர். பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் தீபிகாவுக்கு லண்டனில் உள்ள 'மேடம் டுஸாட்' அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

