முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமியும் நடித்திருக்கிறார்கள். அந்தப் படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆராக நடித்தது பற்றியும் ஒப்பனைக் கலைஞருக்கு தன் நன்றியையும் உருக்கமாகத் தெரிவித்து இருக்கிறார் அரவிந்த்சாமி.
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தமிழ்நாட்டு அரசியலிலும் முக்கிய இடத்தைப் பிடித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜி ராமச்சந்திரன். அவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்து பின் அவருடைய கட்சியில் இணைந்து கொள்கை பரப்புச் செயலாளராக பதவியேற்றார் ஜெயலலிதா.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை வழி நடத்தி தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராகப் பதவி வகித்தவர் மறைந்த ஜெயலலிதா.
அவரது வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற பெயரில் இயக்குநர் விஜய் படமாக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயலலிதாவாக நடித்த கங்கனா ரணாவத் தான் நடிக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுத்து முடித்தாகிவிட்டது என்று ஒரு நெகிழ்ச்சியான பதிவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் அரவிந்த்சாமி நடிக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், டுவிட்டரில், "இன்று 'தலைவி' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு. இந்தப் படத்திற்காக புரட்சித்தலைவரின் அழகையும் வசீகரத்தையும் முடிந்த அளவிற்கு நெருக்கமாக என்னிடம் கொண்டுவந்த ஒப்பனைக் கலைஞர் ரஷீத் சாருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"அடுத்ததாக என்னை இந்த வேடத்திற்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜய்க்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வேடத்தில் நான் புரட்சித் தலைவராகவே வாழ்ந்தேன். இது என் வாழ்க்கையில் கிடைக்க முடியாத அனுபவம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது," என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அச்சு அசலாக பொருந்தியுள்ளார் அரவிந்த்சாமி. அந்தப் படத்தைப் பார்க்கும்போது எப்படி சார் இது சாத்தியமானது? என்று கேட்கத் தோன்றுகிறது. அரவிந்த்சாமி சவரம் செய்யப்பட்ட முகத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணியும் நடிக்கின்றனர். சோபன் பாபுவாக, பிரபல தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகின்றன.
படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதன் முதல் சுவரொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படத்தில் ஜெயலலிதா- எம்ஜிஆர் சேர்ந்திருப்பது போன்ற சுவரொட்டியை எம்.ஜி.ஆர் பிறந்த நாளான இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.
'மதராசபட்டினம்', 'தலைவா' படங்களை இயக்கிய ஏ.எல். விஜய், மிகப்பெரிய வரவு செலவுத் திட்டத்தில் முன்னணி நட்சத்திரப் பட்டியலுடன் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். 'தலைவி' படத்திற்கு ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவரொட்டியில், 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. இது ஊரறிந்த உண்மை' என்ற பாடலுக்கு எம்ஜிஆர். அணிந்திருந்ததைப் போன்ற உடைகளை அணிந்து நடனம் ஆடியிருக்கிறார் அரவிந்த்சாமி. அந்த பாடலின் முன்னோட்டக் காட்சியும் இன்று வெளியாக இருக்கிறது.
அரவிந்த்சாமி நடிப்பில் கடைசியாக 'செக்கச்சிவந்த வானம்' வெளியானது. அந்தப் படத்தைத் தொடர்ந்து, 'சதுரங்க வேட்டை 2', 'நரகாசுரன்' படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த இரு படங்களும் எப்போது வெளியாகும் என அரவிந்த்சாமி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இயக்குநர் மணிரத்னத்தின் பேரன்புக்குரிய நடிகரான அரவிந்த்சாமி, 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் அரவிந்த்சாமிக்கும் நிச்சயம் ஒரு கதாபாத்திரம் கிடைக்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் இவரின் ரசிகர்கள்.

