விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' திரைப்படம் தமிழகத்தில் சுமார் ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அநேகமாக ஜனவரி 13ஆம் தேதி இப்படம் திரைகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அதற்கு முன்பு திரையரங்குகள் தொடர்பாக தமிழக அரசு சில தளர்வுகளை அறிவிக்கவேண்டும் என திரையரங்க உரிமையாளர்களும் திரையுலகத்தினரும் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே நிரப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி அனைத்து இருக்கைகளையும் நிரப்புவதற்கு அரசு அனுமதிக்கவேண்டும் என திரையுலகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
'மாஸ்டர்' போன்ற பெரிய படங்கள், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்கள் மூலம்தான் ரசிகர்களைத் திரையரங்குக்கு ஈர்க்கமுடியும் என அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு நாளுக்குநாள் குறைந்துவரும் நிலையில் திரையரங்குகள் இயங்குவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மட்டுமே திரையுலகம் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வரமுடியும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களைப் பகைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் இந்த அடிப்படையில் 'மாஸ்டர்' படத்துக்காக சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே 'மாஸ்டர் வெளியீட்டுத் தேதியை தயாரிப்புத் தரப்பு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள ஆயிரம் திரையரங்குகளிலேனும் 'மாஸ்டர்' வெளியிடப்படும் என்றும் ஜனவரி இறுதிவரை வேறு படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே 'மாஸ்டர்' படத்துக்கு தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் சண்டைக் காட்சிகள் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி 'யூ ஏ' சான்றிதழ் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் படத்தின் தயாரிப்புத் தரப்பு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது.

