சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் கோலிவுட்டின் படப்
பிடிப்புகள் ஹைதராபாத்தில் இருக்கும் 'பிலிம் சிட்டியில்' நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் காதலர்களான இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒரே இடத்தில் இருந்தனர். ஆனால் நயன்தாரா 'அண்ணாத்த' படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார். விக்னேஷ் சிவன் 'காத்துவாக்குல இரண்டு காதல்' படப்பிடிப்புத்தளத்தில் இருந்தார். வேறு வேறு படப்பிடிப்புத் தளங்களில் இருந்தாலும் காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் படப்பிடிப்பு முடியும் வரை பார்க்க முடியாத நிலையில் இருந்தனர்.
காரணம் 'அண்ணாத்த' படப்பிடிப்புத் தளத்தில் கொரோனா பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன்படி படப்பிடிப்புக் குழுவினர் யாரும் வெளியே செல்ல அனுமதி இல்லை. அதுபோல வெளி ஆட்களும் படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழையவும் முடியாது. அனைவரும் இந்த பாதுகாப்பு வளையத்திற்குள்தான் இருக்கவேண்டும் என்று படக்குழுவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதனால் ஒரே இடத்தில் இருந்தும் காதல் பறவைகள் இருவரும் தனித்தனியே தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் கொரோனாவால் பிரிந்த இந்த காதலர்களை மீண்டும் அதே கொரோனாவே சேர்த்தும் வைத்துவிட்டது.
பல்வேறு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் நடன இயக்குநர் பிருந்தா நடன அமைப்பில் பாடலொன்றைப் படமாக்கி வந்தது படக்குழு. வழக்கமாகச் செய்யப்படும் கொரோனா பரிசோதனையின்போது 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனால் 'அண்ணாத்த' படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்து
ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு சென்னை திரும்ப உள்ளது படக்குழு. ரஜினிக்குச் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனாலும், ரஜினி உடனே சென்னை திரும்பாமல் 2 நாட்களுக்குப் பிறகே திரும்ப முடிவு செய்துள்ளார். படப்பிடிப்பு ரத்தானதால் விக்னேஷ் சிவன் இருக்கும் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார் நயன்தாரா.
இந்நிலையில் பி.எஸ்.வினோத்ராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் 'கூழாங்கல்' என்ற படத்தை 'ரவுடி பிக்சர்ஸ்' மூலம் தயாரிப்பதாக காதல் ஜோடி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "என்றாவது ஒரு நாள்தான் ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமைகொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த 'கூழாங்கல்' எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது.
"கூழாங்கல்' பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.
"திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டாமல் இருக்க முடியாது. தன்னுடைய பின்னணி இசையால் 'கூழாங்கல்'லின்
ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
"இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, அனைத்துலக திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்புக்கும் நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம்.
"இந்தப் படம் உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். விரைவில் இந்தப் படம் வெளியாகும்," என்று தெரிவித்துள்ளனர்.
'ரவுடி பிக்சர்ஸ்' நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து உருவாக்கிய ஒரு தயாரிப்பு நிறுவனமாகும்.

