சமூக வலைத்தளங்களில் என்ன பதிவு போட்டாலும் 'ட்ரெண்டாகி' வருவது நடிகை அமலா பாலுக்கு மட்டுமே என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரைப் பின் தொடரும் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வர இவர் பதிவிடும் புகைப்படங்களில் கவர்ச்சியும் கொஞ்சம் தூக்கலாகவே இருந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் இவர், அண்மைக்காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
அதன்படி 'ஆடை' படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து சர்ச்சைக்குள்ளானார் அமலா பால். 'ஆடை' படத்தைத் தொடர்ந்து அமலா பால் நடிப்பில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'அதோ அந்த பறவை போல' திரைப்படம் இந்த டிசம்பர் வந்தும் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்தப் படத்தில் இவர் சண்டைக் காட்சிகளில் படக்குழுவினரே அசந்து போகும் அளவிற்கு நடித்திருந்ததாகக் கூறப்பட்டது.
படம் முடிவடைந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் திரையரங்கு களில் வெளியிடவில்லை என்றாலும் 'ஒடிடி'யில் கூட அந்தப் படம் வெளியாகவில்லை. சிலர் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று ஆருடம் கூறி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் சர்ச்சைகளில் சிக்கி வரும் அமலா பால், இந்தியில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்ற 21 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கும் படத்தின் தெலுங்கு மறுபதிப்பில் நடித்து வருகிறார்.
'ஆடை' படத்திற்குப் பிறகு மீண்டும் இந்தப் படம் மூலம் அடுத்த சர்ச்சை மிக விரைவில் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு நேரத்தில் கேரளாவில் தனது அம்மாவுடன் வசித்து வந்த அமலா பால், 'இன்ஸ்டகிராம்', 'டுவிட்டர்' வாயிலாக ஏகப்பட்ட படங்களையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் பதிவிட்டு தனது ரசிகர்களுடன் எப்போதுமே தொடர்பிலே இருந்து வருகிறார்.
சர்ச்சைகள் பல வந்தாலும் அதையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வருகிறார்.
புதிதாக எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்து வந்த நடிகை அமலா பால், சில விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்தார்.
இந்நிலையில், "எனது அடுத்த வேலை தொடங்கப்போகிறது. அதற்கான படப்பிடிப்பிடிப்பிற்காக ஹைதராபாத்திற்குப் புறப்படுகிறேன்," என்று பதிவிட்டு படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
அத்துடன் "புதிய நினைவுகளை உருவாக்கு, பழைய நண்பர்களுடன் தொடர்புகொள், மறந்துவிட்ட எதிரிகளிடம் மன்னிப்பு கேள், சிறப்பானவர்களுக்கு நன்றி சொல், உன்னைத் தேடு, ஏதாவது செய் போ, கிளம்பிப் போ," என பதிவிட்டும் பாராட்டுகளை அள்ளி வருகிறார் அமலா பால்.

