கொரோனா விவகாரத்துக்கு மத்தியிலும் திரையுலகத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை தங்களால் இயன்ற வகையில் கொண்டாடி உள்ளனர். அதுகுறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
நடிகை சாயிஷா தமது கணவர் ஆர்யா நடிக்கும் 'எனிமி' படத்தில் பணியாற்றுபவர்களுக்காக பிரம்மாண்ட கேக் ஒன்றைத் தயாரித்துப் பரிசளித்திருக்கிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில் விஷால் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சாயிஷா அளித்த கிறிஸ்மஸ் கேக் மிக மிக சுவையாக இருந்ததாகவும் அதுபோன்ற ஒரு கேக்கை தாம் இதுவரை சுவைத்ததே இல்லை என்றும் பாராட்டுத் தெரிவித்துள்ளார் ஆனந்த் சங்கர்.
ஊரடங்கின்போது கேக் தயாரிப்பில் ஆர்வம் காட்டினாராம் சாயிஷா. தினமும் ஒரு கேக் செய்து கணவரையும் குடும்பத்தாரையும் ஆச்சரியப்பட வைத்தாராம்.
"ஆர்யா எங்கள் படக்குழுவில் இணைந்ததே நல்ல விஷயம். அவர் இருந்தால் படப்பிடிப்பு கலகலப்பாக நகரும். இந்நிலையில் சாயிஷா வீட்டில் இருந்து சுவையான கேக்கும் வருகின்றபோது படக்குழுவின் மகிழ்ச்சி இரட்டிப்பாக அதிகரிக்கிறது," என்று இயக்குநர் ஆனந்த் சங்கர் தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
*** நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிங்கப்பூரில் கொண்டாடி இருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருவரும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
முன்னதாக 'அண்ணாத்த' படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார் நயன்தாரா. அங்கு அப்படக்குழுவைச் சேர்ந்த 4 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதனால் ரஜினி உள்ளிட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். ஆனால் நயன்தாரா தமக்குப் பாதிப்பில்லை என்பதால் ஹைதராபாத்தில் இருந்து ஊர் திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இருவரும் ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்டதாகவும் அங்கிருந்து சிங்கப்பூருக்குப் பறந்ததாகவும் அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. எனினும் இது எந்தளவு உண்மை எனத் தெரியவில்லை.
*** மாமனார் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர் நலமாக இருக்கிறார் என்ற நிம்மதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி உள்ளார் தனுஷ்.
இந்தியில் தயாராகும் 'அட்ராங்கி ரே' படத்தில் சாரா அலிகானுடன் அவர் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறுகிறது.
அப்படக்குழுவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. குறிப்பாக நாயகி சாரா அலிகான் வெளியிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
*** கடந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதுதான் சிம்பு நடிப்பதாக இருந்த 'மாநாடு' படத்தைக் கைவிடுவதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். சிம்பு ஒத்துழைக்காததால்தான் அவர் இவ்வாறு முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து சிம்புவின் தாய் சில தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து, தன் மகன் ஒப்புக்கொண்ட படங்களில் நிச்சயம் நடிப்பார் என உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.
இதன் பின்னர் 40 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்குச் சென்று திரும்பினார் சிம்பு.
பிறகு கடுமையாக உடற்பயிற்சி செய்து தமது உடல் எடையில் முப்பது கிலோவைக் குறைத்தார்.
தற்போது 'ஈஸ்வரன்' படத்தை வெற்றிகரமாக முடித்திருப்பவர் அடுத்து 'மாநாடு' படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
மேலும் 2 புதிய படங்களில் நடிப்பது குறித்து நடந்துவந்த பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடிந்துள்ளதாம்.
இப்படி எல்லாமே நல்லவிதமாக நடந்து வரும் நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையைப் பயன்படுத்தி மீண்டும் சபரிமலைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் சிம்பு.
இம்முறையும் அவர் தீவிரமாக விரதம் கடைப் பிடித்ததாக கூறப்படுகிறது.
அவர் இருமுடியுடன் காணப்படும் புகைப்படங்களை ரசிகர்கள் மிகப் பரவசத்துடன் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

