நயன்தாராவை மறைமுகமாக சீண்டும் வகையில் நடிகை ஆன்ட்ரியா கருத்து தெரிவித்திருப்பது கோடம்பாக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து நயன்தாரா ரசிகர்கள் ஆன்ட்ரியாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தற்போது 'மாஸ்டர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆன்ட்ரியா. இதையடுத்து 'பிசாசு-2' படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் சில நடிகைகளைப் போல் தாம் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாகவில்லை என்றும் நல்ல கதைகளே தமக்கு உதவின என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதான் நயன்தாரா ரசிகர்களை வெகுவாக எரிச்சலடைய வைத்துள்ளது.
"நயன்தாராவின் வளர்ச்சிக்கு ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தேவைப்பட்டன. ஆனால், நான் சிறந்த கதைகளை மட்டுமே நம்பியிருந்தேன். அதேபோல் ஒரு கதைக்குத் தேவைப்பட்டால் மட்டுமே சர்ச்சைக்குரிய காட்சிகளில் சில நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன்," என்று ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சுசி. கணேசன் இயக்கத்தில் உருவாகும் 'ராணி வேலுநாச்சியார்' படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் நயன்தாரா.
கடந்த 1780 முதல் 1790 வரை சிவகங்கை வட்டார ராணியாக இருந்த வேலுநாச்சியார் வீரப்பெண்மணி எனப் பெயரெடுத்தவர். கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போர் தொடுத்த முதல் இந்திய ராணி என்ற பெருமைக்குரியவர். மிகப் பிரம்மாண்டமாகவும் பெரும் பொருட்செலவிலும் இப்படம் உருவாக்கப்படும் என இயக்குநர் சுசி. கணேசன் தெரிவித்துள்ளார்.
தற்போது 'அண்ணாத்த', 'காத்து வாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா. அவற்றை முடித்த கையோடு 'வேலுநாச்சியார்' படத்தில் அவர் நடிப்பார் எனத் தெரிகிறது.
இப்படத்துக்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாம். இது தமிழில் எந்த நாயகியும் இதுவரை பெறாத சம்பளமாக இருக்கும் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, சில முன்னணி, இளம் நாயகர்களையும் சம்பள விஷயத்தில் முந்திவிட்டாராம். ஆன்ட்ரியா மீது கோபத்தில் உள்ள ரசிகர்கள் இந்தப் புதுத் தகவலால் உற்சாகமடைந்துள்ளனர். தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

