மனித வாழ்க்கையில் இருக்கும் உண்மைகளை அப்பட்டமாக காட்டக்கூடிய திரைப்படங்களைப் பார்ப்பதில் தமக்கு அலாதியான விருப்பம் உண்டு என்கிறார் சாய் பல்லவி.
சில உண்மைகளை கன்னத்தில் அறைவது போல் காட்சிப்படுத்துவதும் அவசியம் என தாம் கருதுவதாகவும் அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"நான் சோகமான படங்களை விரும்பிப் பார்ப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது சரியல்ல. உண்மைகளை யதார்த்தமாகச் சொல்லும் படங்கள்தான் எனது தேர்வு.
"நம்மில் பலரும் சில நாடுகளில் சாலையில் போக்குவரத்து சமிக்ஞைக்காக காத்திருக்கும் கார்களைத் துடைத்துவிட்டு காசு கேட்கும் சிறுவர்களைப் பார்த்திருப்போம். அவர்களின் நிலை குறித்து யோசித்திருக்கிறீர்களா?
"அங்கு இருந்து சென்ற பிறகு அந்தச் சிறுவர்களைப் பற்றி மீண்டும் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
"அந்தச் சிறுவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை உடனடியாக தங்கள் தாயாரிடம் கொடுப்பார்கள். அந்தப் பெண்மணியிடம் மேலும் ஒரு கைக் குழந்தை இருக்கும். எனக்கே இந்த நிலைமை இருக்கும்போது ஏன் இன்னொரு குழந்தையை அம்மா பெற்றுக்கொண்டார்? என்று அந்தச் சிறுவர்கள் நினைத்திருப்பார்களா? என்று நான் யோசித்திருக்கிறேன்," என்கிறார் சாய் பல்லவி.
இந்த எண்ணத்தை ஒட்டியே 'கேப்பர் நாம்' (caper naum) என்ற லெபனான் நாட்டுப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாம். அண்மையில் இதை இணையத்தில் பார்த்தபோது மனமுடைந்து போனாராம்.
கசப்பான உண்மைகளை ஒளித்து வைக்காமல் அந்தப் படம் விரிவாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் தாம் நடித்த 'ஓர் இரவு' ஆந்தாலஜி படமும் இந்த வகையைச் சார்ந்ததுதான் என்றும் கூறுகிறார்.
சாய் பல்லவியும் மருத்துவ மாணவி என்பதால் கொரோனா காலகட்டத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். தம்மைத் தற்காத்துக் கொள்வதுடன் படக்குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அக்கறை செலுத்துகிறார்.
"இப்போது ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறேன். அவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அனைவரது உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
"விராட பருவம்' படப்பிடிப்பு இப்போது அதிக கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறது. காட்சி படமாக்கப்படும்போது மட்டும் சேர்ந்து நிற்போம். நடித்து முடித்ததும் சமூக இடைவெளியுடன் விலகியே நிற்போம்.
"எனினும் ஒட்டுமொத்தத்தில் பார்க்கும்போது எல்லோருடைய மனதில் இருந்தும் கொரோனா குறித்த பயம் கிட்டத்தட்ட விலகிவிட்டது," என்கிறார் சாய் பல்லவி.
மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் எனும் நோக்கத்துடன்தான் மருத்துவம் படித்தாராம். இருப்பினும், கொரோனா காலத்தில் தம்மால் மருத்துவச் சேவையை அளிக்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.
"ஆறு ஆண்டுகள் மருத்துவம் படித்துள்ளேன். கொரோனா காலத்தில் அதிக மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். முன்பே தேர்வு எழுதி முடித்திருந்தால் இந்நேரம் மருத்துவராகப் பணியாற்ற தகுதி பெற்றிருப்பேன். இக்கட்டான நேரத்தில் மக்களுக்குச் சேவையாற்ற முடியவில்லை என்ற வருத்தம் அதிகமாக உள்ளது.
"சிறந்த மருத்துவராகப் பெயரெடுக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்," என்று சொல்லும் சாய் பல்லவி, தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார். அவரது லட்சியத்தின்படி தேர்வில் வெற்றி பெற்று விட்டால் மருத்துவர் சாய் பல்லவியின் மக்கள் சேவை விரைவில் தொடங்கக்கூடும்.

