ரஜினிகாந்த் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பின்றி சென்னை திரும்பியிருப்பது அவரது குடும்பத்தாரையும் ரசிகர்களையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.
இந்நிலையில் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பின்போது உடன் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டதும் அவர் மிகவும் கவலையாகிவிட்டாராம்.
'அண்ணாத்த' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. தனி விமானத்தில் சென்று அதில் பங்கேற்றார் ரஜினி.
ஒன்பது நாட்கள் எந்தவிதச் சிக்கலுமின்றி பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் 22ஆம் தேதி மாலை கீர்த்தி சுரேஷின் ஒப்பனையாளர், சிகையலங்கார நிபுணர் உள்ளிட்ட நான்கு பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
'அண்ணாத்த'வில் ரஜினிக்குத் தங்கையாக நடிக்கிறார் கீர்த்தி. அண்ணன், தங்கை பாசத்தை ஆழமாக எடுத்துச் சொல்லும் பல காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டனவாம்.
உண்மையான அண்ணன் தங்கையைப் போல் ரஜினியும் கீர்த்தியும் பாசம் காட்டி உள்ளனர். இந்நிலையில் கீர்த்தியின் உதவியாளருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பதாக தெரியவந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் ரஜினி.
படக்குழுவினருக்கு முன்கூட்டியே ஏன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்று படத் தயாரிப்பு நிர்வாகியிடம் கடிந்து கொண்டதாகத் தகவல். அதற்குள் ரஜினிக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் பயந்துள்ளனர்.
பரிசோதனைக்குப் பிறகு ரஜினிக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதியானதும்தான் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிக்குத் தேவையான பணிவிடைகளை உடனிருந்து செய்துள்ளார் அவரது மகள் ஐஸ்வர்யா.
அச்சமயம் அரசியல் களத்தில் கால்பதிக்க வேண்டாம் என்றும் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டாராம். ஆனால், அப்போது இதற்கு ரஜினி எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ரஜினிக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானதைக் கேள்விப்பட்டு கீர்த்தி சுரேஷும் கவலையில் மூழ்கிவிட்டார்.
பரிசோதனைக்குப் பிறகு ரஜினிக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்ததும்தான் நிம்மதி அடைந்தாராம். ரஜினி குடும்பத்தாரை அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாகத் தகவல்.
ஜனவரி மாத இறுதிக்குள் 'அண்ணாத்த' படத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளாராம்.
நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவ்வப்போது அவர் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திரையுலகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவது என அவர் முடிவு செய்திருப்பதாகவும் அடுத்தடுத்து புதுப் படங்களில் நடிப்பார் என்றும் கோடம்பாக்க விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.

