நடிகர் விஜய் நடித்திருக்கும் 'மாஸ்டர்' படம் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தற்பொழுது 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதனை 100 விழுக்காடாக மாற்றும்படி நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி
பழனிசாமியைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அது தற்பொழுது நிராகரிக்கப்பட்டதால் திரையுலகத்தினர் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
நடிகர் விஜய் அண்மையில் இரவு 10 மணிக்கு மேல் எடப்பாடி பழனி
சாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அந்த தகவலை விஜய் தரப்பு ரகசியமாக வைத்திருந்த நிலையில் மறுநாள் காலையில் தகவல் வெளியாகியது.
'மாஸ்டர்' படத்தை திரையரங்கில் வெளியாக்க வேண்டும் என்பதே விஜய்யின் விருப்பமாக இருந்து வருகிறது. ஆனால், படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் வரவில்லையென்றால் போட்ட பணத்தை மீட்டு எடுப்பது கஷ்டம் என்ற தயக்கம் தயாரிப்பு தரப்பில் உள்ளது.
இந்த நிலையில்தான் முதல்வரைச் சந்தித்து 100 விழுக்காடாக மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார் விஜய். ஒரு கட்டத்தில் 80 விழுக்காடாகவாவது இடம் கொடுங்கள். அப்போதுதான் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்று விஜய் இறங்கி வந்து கோரிக்கையாகவே கூறியுள்ளார். விஜய் கோரிக்கையை பரிசீலிப்பதாக பதில் சொல்லி அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் விஜய் கோரிக்கையை முதல்வர் ஏற்கவில்லை என்பது முதல்வர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்திருப்பதாகவும் திரை
யரங்கில் அதிகபட்சம் 50
விழுக்காட்டுடன் இருக்கைகள்
மட்டுமே அனுமதிக்கப்படும்," என்றும் இருந்தது.
திரையுலகினரின் ஒரே நம்பிக்கையாக இருந்தது விஜய்யின் 'மாஸ்டர்' படம் மட்டுமே. இந்தப் படத்தால் ரசிகர்கள் திரையரங்கு
களுக்கு படையெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு ரசிகர்கள் திரையரங்குக்கு குடும்பத்துடன் வருவது அதிகரிக்கும் என்றும் காத்திருந்தனர். முதல்வரின் அறிக்கை வெளியானது முதல் திரையுலகினர் பலரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.
விஜய்யே நேரில் சென்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை
என்பதால் பலர் தங்கள் படங்களை 'ஓடிடி' இணையத்தளங்களில் பேரம் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
மேலும் 'மாஸ்டர்' காப்பாற்றுமா இல்லையா என்பது பொங்கலுக்குப் பிறகே தெரியும். இதுபற்றி தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டபோது, "மாஸ்டர்' வெளியீட்டுக்காகத்தான் மொத்த திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ரசிகர்கள் அதிகளவு வந்தால், தொடர்ந்து வருவார்கள். இல்லை என்றால் சினிமா துறை இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியதுதான்," என்றார்.
இந்நிலையில், 'பிசாசு 2' படத்தின் விளம்பரப் படத்தை வெளியிட்டு, புத்தாண்டு வாழ்த்து கூறியஇயக்குநர் மிஷ்கின், "கதைகளும் சினிமாவும் இல்லாத நம் வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும். இனி வரும் நாட்களில் குடும்பத்துடன் திரை
யரங்குகளுக்குச் செல்வோம்.
"நான் தனிப்பட்ட முறையில் 'மாஸ்டர்' படத்திற்காக ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குக்கு செல்ல இருக்கிறேன். அனைத்து ரசிகர்களும் மீண்டும் திரையரங்கு
களுக்குச் செல்ல வேண்டும். திரைத்துறை மீண்டும் செழித்து வளர உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்," என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'மாஸ்டர்' படத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இதில் விஜய், கல்லூரி பேராசிரியர் வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வட இந்தியாவிலும் வசூலை குவிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 'B4U மோஷன் பிக்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் 'மாஸ்டர்' திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ வெளியிடுகிறார்.
தீபாவளிக்கு வெளியான
'மாஸ்டர்' படத்தின் அதிரடியான முன்னோட்டக் காட்சி ஒரே மாதத்தில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்து வருகிறது.

