'மாறா' படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார் மாதவன்.
கதாநாயகன் என்ற பிம்பத்தின்மீது தமக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை என்று அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில திரைப்படங்களில் அவர் நடிக்க முன்வந்தபோது சுற்றியிருப்பவர்கள் தடுத்துள்ளனராம். பெரிய நடிகர் என்ற பிம்பம் உடைந்துபோகும் என்றும் எச்சரித்ததாகச் சொல்கிறார்.
"ஆனால், அந்த எச்சரிக்கைகளை நான் எப்போதுமே பொருட்படுத்தியதில்லை. நேரடியாக இணையத்தில் வெளியாகும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது என் நலன் விரும்பிகள் வேண்டாம் என்றனர்.
"வசூலைக் குவிக்கும் அளவுக்கு பிரபலம் இல்லாத நாயகர்கள்தான் இணையத்தில் வெளியாகும் படங்களில் நடிப்பார்கள் என்று பேசப்படுகிறது.
உங்கள்மீதும் அப்படி ஒரு முத்திரை விழுந்துவிடும். எனவே தவிர்க்கப் பாருங்கள்' என்றனர்.
"முன்பு '3 இடியட்ஸ்' படத்தில் நடித்தபோது தமிழ் சினிமாவில் எனது மதிப்பை இழந்துவிடுவேன் என்று சிலர் சுட்டிக் காட்டினார்கள்.
"இப்படித்தான் 'அன்பே சிவம்' படத்தில் நடித்தபோது என்னுடைய பாலிவுட் மதிப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்றனர்.
"ஆனால், இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து எனது திட்டத்தின்படி பயணம் தொடர்ந்திருக்கிறது. நான் தேர்வு செய்த அப்படங்கள் அனைத்துமே நல்ல பெயரை பெற்றுத் தந்தன," என்கிறார் மாதவன்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'சார்லி' படத்தின் மறுபதிப்பாக உருவாகிறது 'மாறா'. ஆனால், மறுபதிப்பு எனும் வார்த்தை பொருத்தமானதல்ல என்கிறார் மாதவன்.
'சார்லி'யைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதே சரி என்கிறார். படம் பார்க்கும்போது ரசிகர்களால் தாம் குறிப்பிடும் இந்த மாறுபாட்டை நிச்சயமாக உணரமுடியும் என்றும் சொல்கிறார்.
இன்றைய தேதியில் இந்த உலகம் மின்னிலக்க உலகமாக மாறிவிட்டது என்றும் புதிய உறவுகளும் நட்பும் அந்த உலகத்தில்தான் வளர்கிறது என்றும் குறிப்பிடும் மாதவன், மின்னிலக்க உலகில் நாம் காண்பவையும் உணர்கின்ற விஷயங்களும் நூறு விழுக்காடு உண்மையானதல்ல என்கிறார்.
"ஒருவரது குணாதிசயங்கள் உட்பட அனைத்தையும் அவரது இணைய வெளிப்பாட்டை மட்டுமே வைத்து கணக்கிடுகிறோம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர் முற்றிலும் மாறுபட்ட மனிதராக இருக்கக்கூடும். அந்த உண்மை தெரியவரும்போது அந்த உறவுகள் பிரிந்து போகவே அதிக வாய்ப்புண்டு. இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
"மாறா' படம் இந்த விஷயத்தை அலசுகிறது. படத்தின் இரு முக்கிய கதாபாத்திரங்களிடமும் கைபேசி கூட இருக்காது. இருவரும் நிஜ வாழ்க்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வார்கள்.
"கதைப்படி இருவரும் நீண்ட காலம் சந்தித்துக்கொள்ள மாட்டார்கள். எனினும் நினைவுகள் மூலம் இணைந்திருப்பதாக உணர்வர்," என்கிறார் மாதவன்.
'மாறா'வில் இவரது ஜோடியாக நடித்திருப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஏற்கெனவே இருவரும் 'விக்ரம் வேதா'வில் இணைந்து நடித்துள்ளனர்.
'மாறா'வில் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் மிகக் குறைவுதானாம்.
"முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உடல்மொழி என்பது மிகவும் அவசியம். 'மாறா'வில் குறைவான காட்சிகளில் இணைந்து நடித்ததால் உடல்மொழி என்பதில் இருவருமே கவனமாக இருந்தோம்.
"ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டால் அந்தக் காட்சிகளுக்கு மதிப்பு இருக்காது. ஒட்டுமொத்த படத்தையும் இது பாதிக்கும். இதை உணர்ந்து ஷ்ரத்தா கச்சிதமாக நடித்தார். அவர் புத்திசாலிப் பெண். கதாபாத்திரத்துக்கு ஏற்ப மிக இயல்பாக நடிக்கக் கூடியவர்," என்று பாராட்டுகிறார் மாதவன்.
பொதுவாக தமது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று சுட்டிக்காட்டுபவர், 'அலைபாயுதே', 'மின்னலே', 'இறுதிச்சுற்று', 'விக்ரம் வேதா' என அனைத்திலும் அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உண்டு எனப் பட்டியலிடுகிறார்.
"இத்தகைய படங்களையும் கதாபாத்திரங்களையும் நான் எப்போதுமே ரசிப்பேன். எனது படங்களில் காதலி, மனைவி, தோழி என யாருமே கதாநாயகனின் காலில் விழுவது போன்ற காட்சி இருக்காது," என்று சொல்லும் மாதவன், தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் தனுஷை வெகுவாகப் பாராட்டுகிறார்.
"தனுஷ் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துலக ரசிகர்களுக்கும் பொருத்தமாக இருப்பதைக் கவனித்து வருகிறேன்.
"இப்படிப்பட்ட படங்கள்தான் இப்போது தேவை. உள்ளூர் படைப்பாக இருந்தாலும் உலக ரசிகர்களுக்கும் புரியக்கூடிய, பொருந்தக்கூடிய கதைக்களங்களும் சில கதாபாத்திரங்களும் அவசியம்," என்கிறார் மாதவன்.
தமது ரசிகர்களின் பிறந்த நாள் மற்றும் செயல்பாடுகளுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கும் திரையுலகப் பிரபலங்களில் மாதவனும் ஒருவர். இதன் மூலம் ரசிகர்கள் அடையும் மகிழ்ச்சி தமக்கு பெரும் மனநிறைவைத் தருவதாகச் சொல்கிறார்.
"நம் மீது அன்பைப் பொழியும் சில உள்ளங்களின் உற்சாகத்துக்காக சில நொடிகளை செலவிடுவது முக்கியம் என நினைக்கிறேன்," என்கிறார் மாதவன்.

