நடிகர் விஜய் சேதுபதி, ரெஜினா ஜோடி சேர்ந்துள்ள படம் 'முகிழ்'. அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கி உள்ளார்.
நல்ல கதை என்பதால் விஜய் சேதுபதியே இப்படத்தைத் தயாரித்துள்ளார். அண்மையில் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை பார்த்துவிட்டு கார்த்திக்கை வெகுவாகப் பாராட்டினாராம் சேதுபதி.
"தன் சொந்த வாழ்க்கையுடன் இப்படத்தைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது என்று சேதுபதி சார் கூறினார்.
"அந்தளவு யதார்த்தமாக படமாக்கி இருக்கிறீர்கள் என்றும் ஒரு குடும்பத் தலைவனாக இப்படத்தைப் பார்க்கும் போது மனநிறைவு ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த முன்னோட்டக் காட்சி தம்மை அதிகம் பேச வைத்துள்ளது. இது தரமான படைப்பு என்று சேதுபதி சார் நற்சான்றிதழ் அளித்திருப்பதால் ரசிகர்களும் இப்படத்தை முழுமையாக ஏற்று பாராட்டுவார்கள் என நம்புகிறேன்," என்கிறார் இயக்குநர் கார்த்திக்.
பட நாயகி ரெஜினா கசான்ட்ரா முதன்முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். அதனால் ஒலிப்பதிவுக்கு முந்தைய நாளே வசனங்களைப் பலமுறை பேசி பயிற்சி எடுத்துக் கொண்டாராம். இப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது.