'வீரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அண்ணன், தம்பிக்கு இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு வெளியான அப்படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அதன்பின்னர் 'என்னை அறிந்தால்' படத்தில் அப்பா-மகளுக்கு இடையிலான பாசம், 'வேதாளம்' படத்தில் அண்ணன்-தங்கையின் பிணைப்பு, 'விஸ்வாசம்' படத்தில் மீண்டும் அப்பா-மகள் அன்பை விவரிக்கும் கதைகளில் நடித்திருப்பவர், இப்போது 'வலிமை'யில் அம்மா-மகன் பாசத்தைச் சொல்லும் கதையில் நடிக்கிறார்.
அஜித் அம்மாவாக நடிப்பவர் சுமித்ரா. இதற்கு முன்பு 'வீரம்', 'பகைவன்' ஆகிய படங்களிலும் அஜித்துடன் நடித்துள்ளார் சுமித்ரா.
'வலிமை'யில் காவல்துறை அதிகாரியாகத் தோன்றுகிறார் அஜித். கதைப்படி அவரது பெயர் அர்ஜுன். 'விஸ்வாசம்' படத்துக்காக உடல் எடையை சற்றே அதிகரித்திருந்தவர் இப்போது ஐபிஎஸ் அதிகாரி வேடத்துக்காக மீண்டும் உடல் இளைத்துள்ளாராம்.
இதற்காக கொரோனா ஊரடங்கின்போது வீட்டிலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்திருக்கிறார். இதனால் 'மங்காத்தா', 'என்னை அறிந்தால்' போலிஸ் அஜித்தைவிட மிக கம்பீரமாகவும் அழகாகவும் காட்சி அளிப்பதாக படக்குழுவினர் உற்சாகப்படுகிறார்கள். 'வலிமை'யில் அஜித்துடன் ஜோடி சேர்ந்திருப்பவர் 'காலா' நாயகி ஹுமா குரோஷி, வித்யாபாலன் தொடங்கி யாமி கௌதம் வரை பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டனவாம். இறுதியில் சண்டைக் காட்சிகளும் இருப்பதால் ஹுமாவைத் தேர்வு செய்திருப்பதாகத் தகவல்.
ஓரிரு காட்சிகளில் அவர் இரு சக்கர வாகனம் ஓட்டவேண்டி உள்ளதாம். முன் அனுபவம் இல்லாவிட்டாலும் இப்படத்துக்காக புல்லட் ஓட்ட கற்றுக்கொண்டிருக்கிறார் ஹுமா. கன்னட நடிகர் அச்சித் குமார் 'வலிமை'யில் அஜித்தின் குடும்ப உறுப்பினராகவும் அஜித்தின் தம்பியாக ராஜ் ஐயப்பனும் நடிக்கின்றனர்.
கன்னட நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டாதான் 'வலிமை'யில் அஜித்துடன் மோதும் வில்லன். இவர் அஜித்தின் தீவிர ரசிகராம். வில்லன் கதாபாத்திரத்துக்காக கன்னடப் படத்தில் நாயகனாக நடிக்கத் தேடிவந்த வாய்ப்புகளைக்கூட ஏற்க மறுத்து விட்டார்.
'சிக்ஸ் பேக்' உடற்கட்டுடன் மிரட்டலாக நடித்திருக்கிறாராம். கார்த்திகேயாவின் அர்ப்பணிப்பைக் கண்டு வியந்துபோன அஜித் படப்பிடிப்பின் கடைசி நாளன்று தன் கைப்பட சமைத்த பிரியாணியைக் கொண்டு அவருக்கு விருந்தளித்திருக்கிறார். 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கிய ஹெச். வினோத் தான் 'வலிமை'யையும் அழகாக செதுக்கி உள்ளார். தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் எப்போது 100 விழுக்காடு இருக்கைகளை நிரப்ப அனுமதி கிடைக்கிறதோ அப்போதுதான் 'வலிமை' வெளியாகுமாம்.

