சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோடம்பாக்கத்தில் உற்சாகத்துடன் களமிறங்கி உள்ளார் பிந்து மாதவி.
அவரது அண்மைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்துகொண்டிருக்கின்றன.
'பகைவனுக்கு அருள்வாய்', 'யாருக்கும் அஞ்சேல்' என பிந்து நடிப்பில் இப்போது இரண்டு படங்கள் உருவாகி வருகின்றன. ஏன் இடைவெளி ஏற்பட்டது என்று கேட்பவர்களுக்கு எல்லாம் இவர் சொல்லும் ஒரே பதில் 'நான் எங்கேயும் போகவில்லை, இங்குதான் இருக்கிறேன்' என்பதுதான்.
"பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அதேபோன்று நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் தேடிவரும். பணம் கிடைக்கிறது என்பதற்காக அத்தகைய வாய்ப்புகளை ஏற்றால் நாம் காணாமல் போய்விடுவோம்.
"ஆனால், ஒரே மாதிரி வேடங்கள் என்றாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இடைவெளி ஏற்படாமல் நடிக்கப் பாருங்கள் என்று பலர் ஆலோசனை கூறுகின்றனர். ஒரு கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்தால்தானே நடிக்கமுடியும்," என்று கேட்கிறார் பிந்து மாதவி.
ஒரு கதையைக் கேட்கும்போதே அது வெற்றிபெறும் அல்லது தோல்வி அடையும் என்பது மனதிற்குள் தோன்றும் என்று குறிப்பிடுபவர், மனதில் நேர்மறை சிந்தனையை அதிர்வலைகளை ஏற்படுத்தும் கதைகள்தான் முக்கியம் என்கிறார்.
"உண்மையில் அப்படிப்பட்ட கதைகளைத்தான் நான் தேர்வு செய்கிறேன். ஒரு நடிகையாக அனைத்து வகைப் படங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடிக்கும் ஆசை எனக்கும் உண்டு. அப்படிப்பட்ட படங்களை விரும்பிப் பார்ப்பேன். குறிப்பாக சரித்திர, புராண படங்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
"என்னுடைய நெருக்கமான நண்பர்கள் மட்டுமல்ல, ரசிகர்கள் சிலரும் கூட அம்மன் வேடம் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். அதற்கு முயற்சி செய்யுங்கள் என்று பலமுறை கூறியுள்ளனர்.
"கனமான நகைகளை அணிந்து விதவிதமான பட்டுச்சேலைகளை உடுத்தி அம்மன், அரசி, இளவரசி என வெவ்வேறு கதாபாத்திரங்களில் திரையில் தோன்றத் தயாராக இருக்கிறேன். ஆனால் அத்தகைய வாய்ப்புகள் கிடைத்தால்தானே எல்லாம் சாத்தியமாகும்," என்று கேள்வி எழுப்பும் பிந்துமாதவி நடிகர் அஜித்தின் தீவிர ரசிகை.
சிறு வயதில் இருந்தே அஜித்தின் நடிப்புக்கு ரசிகையாகிவிட்டதாகச் சொல்கிறார். அண்மையில் வெளியான 'நேர் கொண்ட பார்வை'யிலும் அஜித்தின் கம்பீரம் தமக்குப் பிடித்திருந்ததாக கூறுகிறார்.
"அஜித்தைப் போல் அழகான, மிடுக்கான ஆணைப் பார்த்ததில்லை. சிறு வயதிலேயே என் மனம் கவர்ந்த நாயகன் அவர்தான். இப்போதுவரை அவர் மீதான அந்த ஈர்ப்பு நீடித்து வருகிறது.
"அஜித் சாருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். இந்த ஆசையுடன் பல ஆண்டுகளாக காத்திருக்கிறேன். மிக விரைவில் இந்தக் கனவு நிறைவேறும் என நம்புகிறேன்," என்கிறார் பிந்து மாதவி.
தமக்கென சினிமாவில் சிபாரிசு செய்ய யாரும் இல்லை என்று கூறுபவர், இதுவரையிலான தமது திரைப்பயணம் முழுக்க முழுக்க தாம் சொந்தமாகக் கட்டி அமைத்தது என்கிறார்.
எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் மாடலிங் துறையில் கால் பதித்தவர் அங்கிருந்து நேரடியாக சினிமா துறைக்கு வந்தாராம். பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் நடிகையாக முடிந்ததாம்.
"ஒரு கதையை எப்படி தேர்வு செய்யவேண்டும்? என்பது கூட தெரியாமல் நடிக்கத் தயாரானேன். தெலுங்கில் நான் அறிமுகமான 'ஆவக்காய் பிரியாணி' படம் நல்ல பெயர் வாங்கித் தந்தாலும் அடுத்தடுத்து தேடி வந்த வாய்ப்புகள் திருப்தி அளிக்கவில்லை.
"அந்தச் சமயத்தில்தான் 'கழுகு' பட வாய்ப்பு தேடி வந்தது. அதில் நடித்த பிறகுதான் தமிழ் ரசிகர்கள் மனதில் எனக்கும் இடம் கிடைத்தது.
"இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் தினமும் புதுப்புது விஷயங்களைக் கற்று வருகிறேன். ஆனால், சினிமாவில் நான் போகவேண்டிய தூரமும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதிகம் என்பதை உணர்ந்திருக்கிறேன்," என்கிறார் பிந்து மாதவி.

