நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கெடுக்க அனுப்பப்பட உள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், மற்றும் பிற பிரிவுகள், பொதுப் பிரிவின்கீழ் ஆஸ்கர் விருதுகளுக்கு 'சூரரைப் போற்று' படமும் இணைந்துள்ளது.
'மதர் இந்தியா', 'சலாம் பாம்பே', 'லகான்', மலையாளத் திரைப்படமான 'ஜல்லிக்கட்டு' ஆகிய நான்கு இந்திய படங்கள் மட்டுமே இதுவரை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்தப் படங்களின் பட்டியலில் இந்திய திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட 'சூரரைப் போற்று' படமும் சேர்க்கப்பட்டுள்ளது. சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு, அபர்ணாவின் எதார்த்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்துப் பிரிவுகளிலும் பார்வையாளர்களைச் 'சூரரைப் போற்று' படம் ஆச்சரியப்படுத்தியது.
கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகமான மக்களால் பார்த்து ரசிக்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது. தற்போது 'சூரரைப் போற்று' படக்குழுவினரின் கடின உழைப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியிலும் களமிறங்கியுள்ளது.
"இந்திய மக்கள் மட்டுமின்றி உலகத்தில் வாழும் தமிழ் மக்களின் பாராட்டுகளையும் பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்," என்று படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறியுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கூகலில் அதிகம் தேடப்பட்ட பத்து படங்களின் பட்டியலில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களிலும் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய இடம் கிடைத்துள்ளது. மற்ற ஒன்பது படங்களிலும் இந்திப் படங்களே இடம்பெற்றுள்ள நிலையில், சூர்யாவுக்கு கிடைத்த சிறந்த கௌரவமாகவே இது பார்க்கப்படுகிறது.
'சூரரைப் போற்று' காட்சியில் சூர்யா, அபர்ணா பாலமுரளி.

