கொரோனா விவகாரம் ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து தமிழ்த் திரையுலகத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனால் புதுப்படங்களுக்கு நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்வது, பூசை போடுவது போன்ற பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன.
இந்நிலையில் மீண்டும் கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிம்பு.
இவர்களது கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' பலத்த வரவேற்பைப் பெற்றது. கடைசியாக 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்காக இணைந்தனர்.
அதுவும் வெற்றி பெற்ற நிலையில் சிம்பு தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்துக்காக இருவரும் இணைந்துள்ளனர்.
இந்தத் தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சிம்புவின் 47வது படம். கௌதம் மேனன் சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.
அதனால் வேறு எதுவும் கேட்காமல் உடனடியாக நடிக்க சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு', 'பத்து தல' படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. அவற்றை முடித்த கையோடு கௌதம்மேனன் படத்துக்கான பணிகளைத் தொடங்கத் திட்டமாம்.
இதற்கிடையே 'பிக்பாஸ்' புகழ் லாஸ்லியா அந்நிகழ்ச்சியில் தனது சக போட்டியாளரான தர்ஷனுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' படம் தமிழில் மறுபதிப்பாகிறது. இப்படத்தை தயாரிப்பதுடன் நாயகனின் தந்தையாகவும் நடிக்க உள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
தமிழில் 'கூகல் குட்டப்பன்' என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில்தான் தர்ஷனும் லாஸ்லியாவும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
"அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஜிப்ரான் இசை அமைக்கிறார். ரவிகுமார் சார் போன்ற அனுபவ இயக்குநருடன் பணியாற்றுவது நான் சற்றும் எதிர்பாராத நல்ல வாய்ப்பு," என்று உற்சாகத்தில் மிதக்கிறாராம் லாஸ்லியா.
திருமணத்துக்குப் பிறகு முன்னைவிட கூடுதல் உற்சாகத்துடன் நடித்து வருகிறார் 'கயல்' ஆனந்தி. தற்போது 'ஏமாலி' பட நாயகன் சாம் ஜோன்ஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இது மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படமாம். இன்னும் தலைப்பு வைக்காத படத்தை மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்குகிறார்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் கதாநாயகியாக களமிறங்குகிறார் வனிதா.
இது முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையை வைத்து உருவாகும் படமாம். 'அனல் காற்று' என்று தலைப்பு வைத்திருப்பதாகத் தகவல்.
கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த 'பாம்புச்சட்டை' படத்தை இயக்கிய ஆடம்தாசன்தான் இப்படத்தை இயக்க உள்ளார். இதற்காக தனது உடல் எடையை மிக வேகமாகக் குறைத்து வருகிறார் வனிதா.
இதற்கிடையே அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதுவரை அவர் ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்தப் புதிய படத்துக்கு 'டான்' என்று தலைப்பு வைத்துள்ளனர். மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்.