சிவகார்த்திகேயன் நடிப்பில் 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'.
இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
கடந்த ஜனவரி மாதத்தில் 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் சிவகார்த்திகேயன் குரல் பதிவினையும் முடித்திருந்தார். இந்நிலையில் 'டாக்டர்' திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
'டாக்டர்' படத்தை அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்ததாக புதுமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் 'டான்' திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
டாக்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குகிறார். அதற்காக விஜய்க்கு மட்டும் சிறப்புக் காட்சியாக 'டாக்டர்' படத்தை போட்டுக் காட்ட முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

