இணையத் தொடர்களில் நடித்துவரும் கதாநாயகிகளின் பட்டியலில் காஜல் அகர்வாலும் இணைந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'லைவ் டெலிகாஸ்ட்' என்ற இணையத்தொடர் இரு தினங்களுக்குமுன் வெளியாகி உள்ளது.
இந்தத் தொடரில் நடித்தபோது பல திகில் அனுபவங்கள் ஏற்பட்டதாகச் சொல்கிறார் காஜல். ஆள் அரவமற்ற ஒரு வீட்டில்தான் காட்சிகளைப் படமாக்கினாராம் வெங்கட் பிரபு.
"கதைக்கேற்ற இடத்தைத்தான் படப்பிடிப்புக்காகத் தேர்ந்தெடுத்தார் வெங்கட். அவரது நண்பருக்குச் சொந்தமான இடம் அது. ஒரு மலை உச்சியில் இருக்கும் அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்தது.
"அந்த வீட்டுக்குள் நுழைந்தாலே என் மனதில் ஒருவித அச்சம் சூழ்ந்துவிடும். படப்பிடிப்பு முடிந்த பின்னரும்கூட அந்த வீடும் அது அமைந்துள்ள பகுதியும் அடிக்கடி மனதில் வந்து போகின்றன. அதனால் ஏற்படும் அச்சம் காரணமாக என்னால் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை," என்கிறார் காஜல்.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில்கூட அந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறதாம். அந்த வீட்டுக்குள் நடமாடுவது போன்ற உணர்வும் ஏற்படுவதால் இப்போதும் அந்தப் பயம் மனதை விட்டு நீங்கவில்லை என்கிறார்.
"அந்த வீட்டை நினைத்தாலே குலை நடுங்குகிறது. இந்தத் தொடரில் நடித்த அனுபவத்தை வாழ்நாள் முழுக்க மறக்க இயலாது. படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் மனதில் ஒருவித திகில் உண்டாகும். சிலர் தூக்கத்தை இழக்கவும் நேரிடும்," என எச்சரிக்கிறார் காஜல் அகர்வால்.
கடந்த 2008ஆம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'சரோஜா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பிறகு வெங்கட்டின் வளர்ச்சி தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.
"முதன்முதலாக இணைந்து பணியாற்றியபோதே அவர் அருமையான மனிதர் என்பதைப் புரிந்துகொண்டேன். அவரது குணாதிசயம் அவரது பணியிலும் வெளிப்படுகிறது.
"ஒரு படத்தில் இடம்பெறும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் கூடுமானவரை முக்கியத்துவம் அளிக்கப் பார்ப்பார். எல்லா இயக்குநருக்கும் இப்படியொரு எண்ணம் வராது.
"மீண்டும் வெங்கட் பிரபுவுடன் பணியாற்றிய பிறகு அவர்மீதான மரியாதை மனதில் மேலும் அதிகரித்துள்ளது," என்று சொல்லும் காஜலுக்கும் இயக்குநராக வேண்டும் எனும் விருப்பம் உள்ளதாம். இப்போது இல்லை என்றாலும் என்றேனும் ஒருநாள் அது சாத்தியமாகும் என்கிறார்.

