இளையராஜா புதிதாகத் திறந்திருக்கும் ஒலிப்பதிவுக்கூடம் ஒரு கோவிலைப் போல் இருப்பதாக கூறியுள்ளார் ரஜினி.
அந்தப் புதிய ஒலிப்பதிவு கூடத்துக்கு இரண்டாவது முறையாக அவர் நேற்று முன்தினம் வருகை புரிந்தார்.
சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவுக்கு என தனி ஒலிப்பதிவுக் கூடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அண்மையில் சில பிரச்சினைகளால் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதையடுத்து, சென்னை தியாகராயா நகரில் 'இளையராஜா ஸ்டுடியோ' என்ற பெயரில் புதிய ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றை அமைத்துள்ளார் இளையராஜா. அங்குதான் அவரது இசைப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இளையராஜாவின் வீட்டுக்குச் சென்றார் ரஜினி. அங்கு சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த பின்னர் புதிய ஒலிப்பதிவுக் கூடத்தையும் சுற்றிப் பார்த்தார்.
இந்தப் புதிய ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் நுழைந்ததும் ஒரு கோவிலுக்குள் நுழைந்த உணர்வு தமக்குள் ஏற்பட்டதாக தெரிவித்தார் ரஜினி.
அடுத்தடுத்த நாள்களில் இரண்டு முறை அவர் இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வருகை தந்தார்.
அண்மைக் காலமாக பொது நிகழ்ச்சிகள், விழாக்களில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார் ரஜினி. இந்நிலையில், இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு அவர் இருமுறை வருகை தந்தது கோடம்பாக்கத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

