பிரபல இந்தி நடிகர் அமீர் கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்'.
ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி மறுபதிப்பில் அமீர் கான் நடிக்கிறார். அட்வைத் சந்தன் இயக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். 'லால் சிங் சட்டா' என தலைப்பு வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இத்தகவல்கள் வெளியாகின. இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, இந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் எனத் தகவல் வெளியானது. வட இந்திய ஊடகங்களும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தின. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி விலகலுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
தற்போது கால்ஷீட் பிரச்சினைதான் விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமீர் கானிடம் விவரம் தெரிவித்த பிறகே விலகினாராம் சேதுபதி.
அது போகட்டும். நல்ல கதாபாத்திரங்களுக்காகவும் படைப்புகளுக்காகவும் தனது சம்பளத்தையே விட்டுக்கொடுக்கத் தயார் என்கிறார் விஜய் சேதுபதி.
தமது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் மனநிறைவு தந்த கதாபாத்திரங்கள் குறித்து அண்மைய பேட்டியில் அவர் விவரித்துள்ளார்.
"என் குடும்பத்தை வழிநடத்துவதற்குத் தேவையானவற்றை ஓரளவு சம்பாதித்துவிட்டேன். என் குடும்பத்துக்கும் எனக்கும் இதுபோதும். இனி எனக்கான கதாபாத்திரங்களுக்கு எத்தகைய பங்களிப்பை என்னால் தரமுடியும் என்பதில்தான் எனது கவனம் உள்ளது. ஒரு நல்ல படத்துக்காக எனது சம்பளம் குறித்து யோசிக்காமல் ஆதரவு வழங்குவேன். அதை என் கடமையாகவும் கருதுகிறேன்," என்று தெரிவித்துள்ளார் சேதுபதி.
கலை என்று வரும்போது மொழி என்பது தடையாக இருக்காது என்று குறிப்பிடுபவர், ஒரு படத்தில் நடிப்பதற்காகத் தாம் எத்தகைய திட்டங்களையும் தீட்டுவது இல்லை என்கிறார்.
"என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை நடிப்பில் வெளிப்படுத்துகிறேன். எனது நடிப்பு அதன் போக்கில் செல்வதையே விரும்புகிறேன். நான் இதுவரை நடித்த படங்களில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஏற்றிருந்த ஷில்பா கதாபாத்திரம்தான் ரொம்பப் பிடித்தமானது. அதேபோல் 'சீதக்காதி' படத்தில் 75 வயது முதியவராக ஒவ்வொரு காட்சியிலும் ரசித்து நடித்தேன். பொதுவாக நான் ஏற்கும் எல்லாபாத்திரங்களிலும் விரும்பித்தான் நடிக்கிறேன் என்றாலும் இவ்விரு பாத்திரங்களும் மனதுக்கு நெருக்கமானவை," என்கிறார் சேதுபதி.

