திரிஷா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் 'ராங்கி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் வெளியான இதன் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குநராக இருந்த எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் இது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சரவணன். இனி ரசிகர்கள் தன்னை 'ராங்கி' சரவணன் என அழைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்.
நிமிடத்துக்கு ஒருமுறை அவரால் திரிஷாவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அந்தளவு இப்படத்துக்காக திரிஷா மெனக்கெட்டிருப்பதாகச் சொல்கிறார்.
"இந்தக் கதையை எழுதி முடித்த பிறகுதான் நடிகர்கள் குறித்து யோசிக்க ஆரம்பித்தேன். இதற்கான விவாதம் நடந்த போதெல்லாம் மற்ற அனைவரையும்விட திரிஷாவின் நினைவுதான் அடிக்கடி வந்தது. ஒரு தனி ஆளாக படத்தைத் தாங்கக் கூடிய திறமை அவருக்கு மட்டுமே உள்ளது என்று நினைத்தோம். அதற்கேற்ப திரிஷா தனது ஆன்மாவைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
"எனது குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒற்றை வரியில் என்னிடம் சொன்ன கதைதான் 'ராங்கி'யாக உருவெடுத்துள்ளது. அவர் காதலை மையப்படுத்தி சொன்ன கதையில் அரசியலை கலந்திருக்கிறேன். 'ராங்கி' அனைவர் மனதையும் கவர்வாள்," என்கிறார் சரவணன்.
லிபியாவை கதைக்களமாகக் கொண்டு உருவாகி இருக்க வேண்டிய இந்தப் படம், அந்நாட்டு அரசியலில் கொதிநிலையில் இருப்பதால் உஸ்பெகிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் கதையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
"இப்போது திரையுலகம் நிறைய மாறிவிட்டது. அனைத்து கலைஞர்களுமே சினிமாவை மேலும் ஆழமாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். நாயகன், நாயகி, குணச்சித்திர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே தங்களது பங்களிப்பை எப்படி அதிகப்படுத்தலாம் என்று யோசிக்கிறார்கள்.
"திரிஷாவும் அதற்கு விதிவிலக்கல்ல. தனது கதாபாத்திரத்துக்குள் முழுமையாக நுழைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்தப் புரிதலுடன்தான் ஒவ்வொரு காட்சியிலும் நடித்தார்," என்கிறார் சரவணன்.
தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட அரசியலும் திகிலும் கலந்த திரைப்படம் வந்திருப்பதாக தாம் நினைக்கவில்லை என்று குறிப்பிடுபவர், தாம் சொல்வது உண்மை என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்களால் நிச்சயம் உணர முடியும் என்கிறார்.
"குறு முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்துவிட்டு பாராட்டாதவர்களே இல்லை. திரையில் தோன்றும் அழகழகான ஊர்கள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
"இதுபோன்று ஆச்சரியப்பட்டு கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு மெனக்கெட்டு ஊரும் பெயரும் தெரியாத இடங்களுக்குச் சென்று பல நாட்கள் பயமில்லாமல் தங்கி காட்சிகளைப் படமாக்கினோம். எங்கள் முயற்சியும் உழைப்பும் வீண் போகவில்லை.
"'ரேணிகுண்டா' படம் மூலம் அறிமுகமான சக்திவேல்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்த உஸ்பெகிஸ்தான் நாடும் அவரது கைவண்ணத்தால் அப்படியே நம் கண் முன்னே வந்து நிற்கும். ஒவ்வொரு காட்சியையும் அருமையாகப் பதிவு செய்துள்ளார்.
"இதுபோன்ற அரசியல், திகில் படங்களுக்குப் பின்னணி இசையும் பாடல்களும் மிக முக்கியம். அவை நல்லபடியாக இருந்தால்தான் படத்தை ரசிக்க முடியும்.
"இதை உணர்ந்து அருமையாக இசையமைத்துள்ளார் சத்யா. அதனால்தான் அவருடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன்," என்று சொல்லும் சரவணன், தாம் இயக்குநர் முருகதாசிடம் பணியாற்றியது மிகச் சிறந்த வாய்ப்பு என்கிறார்.
இத்தகைய வாய்ப்பு கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றும் குறிப்பிடுகிறார்.

