தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக மழையை மையமாக வைத்து சில படங்கள் உருவாகி வருகின்றன. அவற்றுள் 'மழையில் நனைகிறேன்' படமும் ஒன்று.
நாயகியின் அறிமுகக் காட்சியும் படத்தின் இறுதிக் காட்சியும் மழையில் நடக்குமாம். அதனால் இப்படி ஒரு தலைப்பைச் சூட்டியதாகச் சொல்கிறது படக்குழு.
ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை டி.சுரேஷ்குமார் இயக்கி உள்ளார். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அலசுகிறது 'மழையில் நனைகிறேன்'.
இதில் ரெபா மோனிகா நாயகியாக நடித்துள்ளார். அன்சன் பால், ராஜா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"பொறியியல் படித்து வரும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரு கிறிஸ்துவ இளைஞன் மீது காதல் உண்டாகிறது. அந்த இளைஞனுக்கோ எந்த வேலையும் இல்லை. வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
"இந்தக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. அதையும் மீறி காதலர்கள் என்ன செய்கிறார்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இப்படம் அலசுகிறது.
"இப்போதெல்லாம் காதலில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது ஒன்று காதலர்கள் காயப்பட வேண்டியிருக்கிறது அல்லது காதலர்களின் பெற்றோர் காயப்பட நேரிடுகிறது. இது குறித்தும் இந்தப் படம் பேசும்," என்கிறார் ரெபா மோனிகா.
படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன என்றாலும் வில்லன் என்று யாரும் கிடையாதாம்.
வெளியீடு காணும் முன்பே உலகத் திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வாகி உள்ளது. இது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் ரெபா.
"இப்போதெல்லாம் சமூகப் பிரச்சினைகளை அலசக்கூடிய படங்களை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். மேலும் நியாயமான அலசல் என்றால் அவற்றை வரவேற்று ஆதரிக்கிறார்கள்.
"இந்தப் படம் உண்மையில் நல்ல கருத்துகளை முன்வைக்கும் வகையில் உருவாகி உள்ளது. எனவே ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்," என்கிறார் இயக்குநர் சுரேஷ்குமார்.
அடுத்த மாதம் திரைகாணும் இப்படத்துக்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார். இயக்குநர் விஜியும் கவின் பாண்டியனும் வசனங்களை எழுதி உள்ளனர்.
"ரெபா மோனிகாவைப் பொருத்தவரை மிகுந்த அர்ப்பணிப்புடன் நடிக்கக் கூடியவர். தனது கதாபாத்திரத்தை அழகாக மெருகேற்றுவார். அதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
"பிகில்' படத்திற்காக அவர் எந்தளவுக்கு பேசப்பட்டாரோ அதைவிட இந்தப் படம் அவரைப் பற்றி அதிகம் பேச வைக்கும்.
"இந்தப் படத்தில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளார். தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது," என்று மனதாரப் பாராட்டுகிறார் இயக்குநர் சுரேஷ் குமார்.

