'தலைவி' படத்தில் நடிப்பதற்காக கங்கனா ரணாவத் தன்னுடைய உடல் எடையை அதிகரித்து நடித்த பிறகு தற்பொழுது எடை குறைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கைத் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்தசாமியும் ஜானகியாக நடிகை மதுபாலாவும் சசிகலாவாக நடிகை பூர்ணாவும் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் சுவரொட்டி அண்மையில் வெளியாகி நல்லவரவேற்பைப் பெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நடிகை கங்கனாவின் குரல் பதிவுப் பணிகள் தற்பொழுது நடந்து வருகின்றன.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வெற்றிகரமாக எங்கள் கனவுத் திரைப்படமான 'தலைவி' படப்பிடிப்புகளை முடித்து விட்டோம். எந்த நடிகைக்கும் எளிதில் கிடைத்திடாத, அரிதான, ரத்தமும் சதையுமான கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது. நான் அதிகம் விரும்பி நடித்தேன். வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
"நான் இந்தப் படத்திற்காக 20 கிலோ வரை உடல் எடையை அதிகரித்து முக்கியமான காட்சிகளில் நடித்தபிறகு மீண்டும் பழைய நிலைக்கு என்னுடைய எடையைக் குறைத்துள்ளேன்.
"இந்தியாவில் இதுவரை எந்த நடிகையும் இதுபோன்ற சாதனையைச் செய்ததில்லை.
"2021 தொடங்கியதிலிருந்து, நான் என்னுடைய மாதவிடாய் நாட்களில் கூட விடுப்பு எடுக்காமல் இந்தப் படத்திற்காக பணியாற்றி இருக்கிறேன்.
"இதை நான் புகாராக சொல்லவில்லை. கடுமையாக இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறேன் என்று சொல்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
சாதனை என்று மற்ற நடிகைகளை வம்புக்கு இழுக்கும் கங்கானா ரணாவத் வெளியிடும் பதிவுகள் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்துபவைகளாக உள்ளன என்று இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

