திரைப்படத்தில் வெளியாகாத ஒரு தமிழ்ப் பாடல் கோடிக்கணக்கான மக்களால் ரசிக்கப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு அந்தப் பாடலின் எளிமையான தமிழ் வார்த்தைகளும் இசையும் பாடலைப் பாடியவர்களும்தான் காரணம் என்கின்றது சமூக வலைத்தளம்.
வழக்கமான அர்த்தம் புரியாத பாடல்களைக் கேட்டு கேட்டு புளித்துப்போன காதுகளுக்கு, 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் இதமாய் வந்து நிற்கிறது. கடும் தாகத்தில் வெய்யிலில் அலைந்து திரிந்து வந்தவனுக்கு, ஐஸ்கட்டி போட்டு கொடுத்த பழரசம்போல, தித்திப்பாய் இசை சுவைக்கின்றது.
ஒன்றுக்கும் ஆகாத அர்த்தம் புரியாத பாடல்கள் எல்லாம் உலக சாதனை படைக்கும்போது அதற்கான அத்தனை தகுதியும் கொண்ட இந்தப் பாடல் ஏன் வெற்றி பெறக்கூடாது என்கின்றனர் திரையுலகத்தினர்.
சினிமா பிரபலங்களை மட்டுமே ஊக்குவிக்கக்கூடாது. வெளியிலும் பெயர் தெரியாத நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது இந்தப் பாடல்.
'என்ஜாய் எஞ்சாமி' பாடலை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீயும் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியுள்ளனர்.
படத்தில் இருக்கும் 'தீ' ஒன்றும் சாதாரண பெண் கிடையாது. 'கபாலி' படத்தில் வரும் 'கண்ணம்மா கண்ணம்மா', 'இறுதிச் சுற்று' படத்தில் 'ஏ சண்டக்காரா', 'மாரி 2' படத்தில் 'ரெளடி பேபி', 'ஜிப்ஸி' படத்தில் 'எங்கும் மாய ஊஞ்சல்', 'சூரரைப் போற்று' படத்தில் 'காட்டுப் பயலே', 'ஜகமே தந்திரம்' படத்தில் 'ரகிட ரகிட' என வெற்றி பெற்ற பாடல்களைப் பாடியவர் இவர்.
சுயமாக ஒரு பாடல் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில், தீயும் தெருக்குரல் அறிவும் இணைந்து, ரகுமான் இசை அமைப்பில் உருவானதுதான் இந்த 'என்ஜாய் எஞ்சாமி' பாடல்.
வெறும் பாடலாகக் கேட்டால், ஒரே முறையில் கடந்து சென்றுவிடுவோம். மீண்டும் மீண்டும் அர்த்தம் புரிந்து கேட்டுப் பார்த்தால்
தமிழில் வெளிவந்த அற்புதமான படைப்பு இது என்று புரியும்.
சமூகவியல், சூழலியல், அறிவியல், இயற்கை, வலி என்று எல்லாம் கலந்த ஒரு கலவை
யாகத் தெரியும்.
பாடலின் ஆரம்பமே குலவைச் சத்தமும் பறை இசையும் அசத்துகிறது. 'நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக் கொடுத்தானே
பூர்வக்குடி' என்பதில் தொடங்கும் ஆழமான கருத்து, பாடல் முடியும் வரை அப்படியே தொடர்கிறது.
'பாட்டன் பூட்டன் காத்த பூமி, ஆட்டம் போட்டு காட்டும் சாமி, ராட்டினம்போல் சுத்தி வந்தா சேவ கூவுச்சி, அது போட்டு வச்ச எச்சமெல்லாம் காடா மாறுச்சி, நம்ம வீடா மாறுச்சி' இந்த வரிகள் எல்லாம் இயற்கை அறிவியலை நமக்கு ஞாபகப்படுத்தும்.
கூடவே எல்லோருக்கும் புரியும் எளிமையான தமிழ் வரிகள் சேர்ந்ததால், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது இப்பாடல். மொழி தெரியாதவர்களும் இந்தப் பாடலை முணுமுணுக்கத் தொடங்கி உள்ளனர்.

