நடிகர் விக்ரம் ஏழு வேடங்களில் நடித்து வெளிவரவிருக்கும் 'கோப்ரா' படத்தின் வெளியீடு எப்போது என தகவல் வெளியாகியுள்ளது.
'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, நடிகர் விக்ரமுடன் இணைந்து எடுக்கும் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் ஜூலை மாதத்தில் படம் வெளியாகும் என்றும் அறிவித்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு
ரஷ்யாவில் நடந்தது. அப்போதுதான் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் பாதியில் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படக்குழு இந்தியா திரும்பியது.
அதனால் பச்சை தடுப்பு வைத்து
'கிராபிக்ஸ்' மூலமாக மீதமுள்ள காட்சிகளைச் சென்னையிலேயே படமாக்கினார் இயக்குநர்.
இந்நிலையில் 'கோப்ரா' படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் குறித்து அஜய் ஞானமுத்து கூறுகையில், "கடுமையான விஷத்தன்மை கொண்ட 'கோப்ரா' இன பாம்பு எதிர்பாராத வகையில் தாக்குதல்
நடத்துவதைப் போன்று இந்தப் படத்தில் எதிர்பாராமல் செயல்படும் விதத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடித்துள்ளார்.
"கோப்ரா படத்தில் விக்ரம் நடித்துள்ள முக்கிய காட்சிகள் ரஷ்யாவின் தலை
நகரான பீட்டர் ஸ்பர்க்கில் 13 நாட்கள் நடைபெற்றன. ரஷ்ய அதிபர் புட்டினின் மாளிகையில் பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
"தற்பொழுது படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட பணிகள் முடிவடைந்துவிட்டதால் விரைவில் 'எடிட்டிங்' பணிகள் தொடங்க உள்ளன.
"இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கே.ஜி.எஃப்' படப்புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்' தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
"மேலும் ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்," என்றார்.
இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியானது. அதில் அதிரடி, சண்டைக் காட்சிகளுடன் கணித கோட்பாடு
களைப் பயன்படுத்தி குற்றம் செய்பவராக நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். அவருக்கு வில்லனாக நடித்துள்ளார் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்.
1 நிமிடம் 47 விநாடிகள் நீளம் கொண்ட 'கோப்ரா' படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியாகும் நாளுக்காக விக்ரமின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

