'குக் வித் கோமாளி'க்குப் போட்டியாக
சன் தொலைக்காட்சியின் புதிய திட்டம்
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிகழ்ச்சியை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது என்று கூறலாம். ஒரு சமையல் நிகழ்ச்சியில் நகைச்சுவையைப் புகுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நிகழ்ச்சியாக வெற்றி கண்டிருக்கிறார்கள் 'குக் வித் கோமாளி' குழுவினர். அதனால் சன் தொலைக்காட்சியும் இதுபோன்ற சமையல் நிகழ்ச்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த சமையல் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
'காசு கொடுத்தால்தான் வாக்கு'
யோகி பாபு நாயகனாக 'மண்டேலா' என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதில், தேர்தலில் கள்ள வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படுகிறார் யோகி பாபு. தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களிடம் வாக்குக்கு காசு வாங்கிய யோகி பாபு நோட்டாவைப் பார்த்துவிட்டு "மூன்றாவது ஒரு நபர் இருப்பதாகவும் யாராக இருந்தாலும் காசு கொடுத்தால்தான் நான் வாக்களிப்பேன்," என்றும் நகைச்சுவையாகக் கூறுகிறார். இது பலராலும் விரும்பப்பட்டு பார்க்கப்பட்டு வருகிறது.

