கொரோனா விவகாரம் மெல்ல அடங்கிவரும் நிலையில் கோடம்பாக்கம் மீண்டும் முழு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
இதனால் இதுவரை அமைதியாக இருந்த திரைக்கலைஞர்கள் தங்களுக்குரிய புதிய வாய்ப்புகளை வேட்டையாடத் துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், நடிகை தமன்னா பல நல்ல கதாபாத்திரங்களும் கதைகளும் தம்மைத் தேடி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் நடித்து வருபவர், அடுத்து ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.
பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கையைப் படமாக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 'தேவினேனே' தெலுங்கு படத்தை இயக்கிய சிவநாகு, ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.
கடந்தாண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியீடு கண்டது. 'மகாநதி' என்ற தலைப்பில் வெளியான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார்.
விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் சிறப்பாக நடித்த கீர்த்திக்கு சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருது கிடைத்தது. இந்நிலையில் அக்காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகை ஜமுனாவின் வாழ்க்கையையும் படமாக்க முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக படத்தின் தயாரிப்புத் தரப்பு தமன்னாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இயக்குநர் விவரித்த திரைக்கதையைக் கேட்ட தமன்னா, தனது முதற்கட்ட சம்மதத்தைத் தெரிவித்துள்ளாராம்.
அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னர் தமது தரப்பில் முன்வைக்கப்படும் சில கேள்விகள், சந்தேகங்களுக்கான விளக்கங்களை தமன்னா எதிர்பார்பார்ப்பதாகவும் அவை திருப்தி அளிக்கும் பட்சத்தில் அவர் தமது முழு சம்மதத்தைத் தெரிவிப்பார் என்றும் படக்குழு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1952ஆம் ஆண்டு 'புட்டிலு' தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஜமுனா தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சுமார் 30 ஆண்டுகள் தெலுங்குத் திரையுலகில் கோலோச்சிய அவர் தமிழ் ரசிகர்களையும் தன் நடிப்பால் கவர்ந்தவர்.
இன்னும் திரையுலகில் பவனி வரும் ஜமுனாவின் நடிப்பில் 'அன்னபூர்னமாகரி மணவாடு' என்ற படம் விரைவில் திரை காண உள்ளது. தமன்னாவைப் பொறுத்தவரை தான் நடித்த 'சீட்டி மார்' படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். இது தமிழிலும் வெளியாகிறது.
இதில் முதன்முறையாக திரையில் கபடி வீராங்கனையாகத் தோன்றுகிறார். கோபிசந்த் நாயகனாக நடித்துள்ள இப்படம் எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகெங்கும் வெளியீடு காண்கிறது. இதில் பூமிகா சாவ்லா, சூரிய வன்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மணிசர்மா இசையமைத்துள்ளார்.

