தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் கண்ட படமாக சாதனை படைத்துள்ளது 'அசுரன்'. இது தெலுங்கில் 'நாரப்பா' என்ற பெயரில் மறுபதிப்பாகிறது.
வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தை விமர்சகர்களும் திரையுலகத்தினரும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஒசாகா அனைத்துலக தமிழ்த் திரைப்பட விழாவில் 'அசுரன்' படத்தைத் திரையிட உள்ளனர். சிறந்த தமிழ்ப்பட விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27, 28ஆம் தேதிகளில் இந்தத் திரைப்பட விழா நடைபெற உள்ளது.
இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்களோ சோகத்தில் உள்ளனர்.
'சூரரைப் போற்று' படம் ஆஸ்கார் விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு தேர்வாகவில்லை என்பதே இதற்குக் காரணம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஆஸ்கார் விருதுக்கான பொதுப் பிரிவில் போட்டியிட இப்படம் தேர்வானது.
மொத்தம் 366 படங்களில் 'சூரரைப் போற்று' படமும் இடம்பெற்றிருப்பதாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விருதுப் போட்டிக்குத் தேர்வான படங்களின் இறுதிப் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 'சூரரைப் போற்று' இடம்பெறவில்லை.
இதனால் வருத்தமடைந்த போதிலும், 'சூரரைப் போற்று' தரமான படைப்பு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.
புதிய கதைக்களத்தில் நடிப்பதால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இதற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவதாகத் தகவல்.

