ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல் அல்லது அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
கொரோனா விவகாரத்தை அடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். எனினும் தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், சென்னைக்கு அருகே உள்ள கிழக்கு கடற்கரைச்சாலையில் இன்று 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், திடீரென அது ரத்தாகியுள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ரஜினியின் உடல்நிலை காரணமாக டிசம்பர் மாதம் நடந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டது. இந்தாண்டு தீபாவளிக்கு முன்பாக படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது தயாரிப்புத் தரப்பு.
எனவே மார்ச் மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினால் மட்டுமே குறித்த நேரத்தில் படத்தை வெளியிட முடியும்.
சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் 'இஸ்கான்' கோயிலுக்கு அருகில் இருக்கும் கேரள ஹவுஸில்தான் படப்பிடிப்பு நடத்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
முன்பே திட்டமிட்டபடி மார்ச் 8ஆம் தேதி பட வேலைகள் தொடங்கி இருக்க வேண்டும். எனினும் ஒரு வாரம் தள்ளிப்போனது. பிறகு இம்மாதம் 15ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கும் எனக் கூறப்பட்டது. இப்போது அதுவும் நடக்கவில்லை.
இதனால் ரஜினியின் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளது.
"சில தினங்களுக்கு முன் திடீரென உடல் நலனில் சிறு பிரச்சினை ஏற்பட்டபோது, தன்னை நலம் விசாரித்தவர்களிடம் கவலைப்பட ஒன்றும் இல்லை என்றுதான் ரஜினி சார் தெரிவித்தார். மேலும், படக்குழுவினரிடமும் தாம் படப்பிடிப்பில் பங்கேற்க தயாராகிவிட்டதாக தகவல் கூறியுள்ளார்.
"தேவையான ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு படப்பிடிப்பை துவங்கலாம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாரும் ரஜினியிடம் கூறியுள்ளனர்.
"இந்நிலையில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதாக வெளியான தகவல் காரணமாகவே 'அண்ணாத்த' படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நினைக்கத் தோன்றுகிறது," என கோடம்பாக்க விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.
இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனினும் இந்தாண்டு இறுதிக்குள் 'அண்ணாத்த'யை வெளியிடுவதில் படத்தின் தயாரிப்புத்தரப்பு முனைப்பாக உள்ளதாம்.

