பிரபுதேவாவிற்கே இந்த நிலையா?
தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கியவர் நடிகர் பிரபுதேவா. முன்னணி நாயகனாக விளங்கினாலும் இவர் நடித்து முடித்த 'யங் மங் சங்' படத்தைப் பற்றிய செய்திகள் 2019ல் வெளியாகின. அதன்பிறகு அந்தப் படம் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து 'பொன்மாணிக்கவேல்', 'தேள்' படங்கள் எடுக்கப்பட்டன. அந்தப் படங்களும் வெளியாகவில்லை. தற்பொழுது இவர் பகீரா', 'ஊமை விழிகள்' படங்களில் நடித்து வருகிறார். எத்தனையோ படங்கள் வெளிவராமல் தவிப்பதற்கும் முன்னணி நடிகரும் இந்தியில் வெற்றிபெற்ற இயக்குநருமான பிரபு தேவாவின் படங்கள் வெளிவராமல் தவிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.
சாதனை படைக்கும் 'கேஜிஎப் 2'
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடிக்கும் 'கேஜிஎப் 2' படத்தின் முன்னோட்டக் காட்சி கடந்த ஜனவரி மாதம் இணையத்தில் வெளியாகி முந்தைய பல இந்திய சாதனைகளை முறியடித்து வருகிறது. இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு வெளிவந்த 'முலன்' படத்தின் முன்னோட்டக் காட்சிதான் 175 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்தது. அந்தச் சாதனையைத் தற்போது 'கேஜிஎப் 2' முறியடித்துள்ளது. இந்தப் படம் ஜூலை 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தடகள வீராங்கனையாக ஐஸ்வர்யா
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன் வாழ்க்கை திரைப்படமாகிறது. அவரின் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. சாந்தி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி செளந்தரராஜனின் கிராமத்தில் படப்பிடிப்பை தொடங்கி பஞ்சாப், கத்தார், ஓமன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.