திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
beaa141e-0341-4bb4-89d4-00b3c8603cbd
-
multi-img1 of 3

'குறும்பு பெண்ணாக நடிக்க ஆசை'

குறும்புத்தனங்கள் நிறைந்த இளம்பெண்ணாக நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் நடிகை சுரபி.

மேலும் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கத் தயார் எனவும் அறிவித்துள்ளார்.

'இவன் வேற மாதிரி', 'வேலையில்லா பட்டதாரி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சுரபிக்கு இன்னும் எதிர்பார்த்த வகையில் வாய்ப்புகள் அமையவில்லை. இதையடுத்து தெலுங்கு, கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

"குறும்புத்தனமும் ஆதிக்கப்போக்கும் கொண்ட பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அதனால்தான் திரையிலும் அத்தகைய பாத்திரங்களில் நடிக்க மனம் விரும்புகிறது.

"தற்போது எனக்கு அறவே வாய்ப்புகள் இல்லை என்று கூறுவது சரியல்ல. ஜி.வி. பிரகாஷுடன் 'அடங்காதே' என்ற தமிழ்ப் படத்திலும் மூன்று தெலுங்கு, ஒரு கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறேன்," என்கிறார் சுரபி.

டிராக்டர் ஓட்டி அசத்திய ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளங்களில் எது குறித்துப் பதிவிட்டாலும் லட்சக்கணக்கானோர் அதைத் தவறாமல் பார்த்தும் படித்தும் விடுகின்றனர்.

இந்நிலையில் தாம் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள காட்சிகள் கொண்ட காணொளி ஒன்றை அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

விவசாயி கோலத்தில் ஒரு டிராக்டரில் அமர்ந்து அவர் லாவகமாக ஓட்டும் காட்சி அழகாகவும் விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் ரசிகர்கள் பலர் பின்னூட்டம் இட்டுள்ளனர்.

மகனுக்கு பெயர் சூட்டிய கார்த்தி

தனது இரண்டாவது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி உள்ளார் கார்த்தி. இதுகுறித்து தமது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு கார்த்திக்கும் ரஞ்சனிக்கும் திருமணமானது. 2013ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு உமையாள் என்று பெயர் சூட்டியிருந்தனர்.

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் இத்தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தன் மகனுக்கு 'கந்தன்' என்று முருகக் கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளார் கார்த்தி.

"கண்ணா, அம்மா, அக்கா, நான் மூவரும் சேர்ந்து உனக்கு ஆசையாக கந்தன் எனப் பெயர் சூட்டியுள்ளோம். உன் வருகையால் நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்," என்று சமூக வலைத்தளத்தில் கார்த்தி பதிவிட்டுள்ளார்.

'ஓடிடி'யில் வெளியாகும் திரிஷா படம்

திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள புதுப்படம் 'பரமபதம் விளை யாட்டு'. நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையுடன் உருவாகியுள்ள இப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். கடந்தாண்டு மார்ச் மாதமே இப்படம் திரைகாண இருந்தது. ஆனால், கொரோனா விவகாரத்தால் தள்ளிப்போனது. இந்நிலையில், முன்னணி 'ஓடிடி' நிறுவனம் ஒன்று இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதாகத் தகவல். இதையடுத்து மே மாதம் இப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.