திரும்பிய பக்கமெல்லாம் பாராட்டுகள் குவிவதால் உற்சாகத்தில் மிதக்கிறார் ரெஜினா கஸாண்ட்ரா.
காரணம் அண்மையில் வெளியீடு கண்ட 'நெஞ்சம் மறப்பதில்லை' படம். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
எனினும், ரெஜினாவின் நடிப்பு மிக நன்றாக இருப்பதாக பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
"முன்பே வெளியீடு கண்டிருக்க வேண்டிய படம் இது. இப்போதாவது வெளியானதே என்று முதலில் நிம்மதி அடைந்தேன்.
"இப்போது கிடைக்கும் பாராட்டுகளைப் பார்க்கும்போது முன்பே வெளியாகி இருந்தால் திரைஉலகில் எனது மதிப்பு இந்நேரம் இருமடங்காக அதிகரித்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது," என்கிறார் ரெஜினா.
அவர் சொல்வதும் உண்மைதான். காரணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'.
சற்றே தாமதமானாலும் முழுப் படத்தையும் எப்போதோ முடித்து விட்டார் செல்வராகவன்.
அதன்பிறகு இப்படத்துக்கான வெளியீட்டுத் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் திரைக்கு வந்த பாடில்லை. எப்படியோ பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட்டு இப்போது வெளியாகியுள்ளது.
"ஒவ்வொரு முறையும் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்போது எனக்கு ஏமாற்றங்கள் காத்திருக்கும்.
"காலையில் அறிவிப்பைப் பார்த்துவிட்டு பலர் என்னைத் தொடர்பு கொண்டு பேசுவார்கள். என்னுடைய கைபேசியில் வாழ்த்து செய்திகள் குவியும்.
"ஆனால், திரையரங்குக்குச் சென்றால் கடைசி நேரத்தில் வெளியீடு ரத்தாகிவிட்டதாக தகவல் கூறுவார்கள். இப்படி பலமுறை எனது எதிர்பார்ப்பு வீணாகிப் போனது," என்கிறார் ரெஜினா.
இந்த ஏமாற்றங்களுக்கு மத்தியில் இப்படம் எப்போது வெளியீடு கண்டாலும் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மட்டும் மனதை விட்டு அகலவில்லையாம். காரணம் செல்வராகவன் இயக்கத்தின் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது என்கிறார்.
'சக்ரா', 'நெஞ்சம் மறப்பதில்லை' என அடுத்தடுத்து இவர் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் வெளியாகி உள்ளன. இனி அடுத்த ஓராண்டுக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டாராம்.
வில்லி வேடத்தில் நடிப்பதற்காகத்தான் இருசக்கர வாகனங்கள் ஓட்ட கற்றுக் கொண்டீர்களா என்று கேட்டால், அப்படியெல்லாம் ஏதுமில்லை என சிரிப்புடன் பதிலளிக்கிறார்.
"நான் ஏற்கெனவே தெலுங்கில் 'எவரு' படத்தில் வில்லியாக நடித்துள்ளேன். அதன்பிறகுதான் 'சக்ரா' வாய்ப்புக் கிடைத்தது. நான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு 'புல்லட்' ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று இயக்குநர் கூறினார். அதனால் கற்றுக்கொண்டேன்.
"இதுகுறித்து ரசிகர்களில் சிலர் கிண்டல் செய்வார்கள் என்று கூட தோன்றியது. ஆனால் அதற்கு நேர்மாறாக, இருசக்கர வாகனம் ஓட்டும்போது கூட அழகாக இருக்கிறீர்கள். இது கம்பீரமான அழகு என்றெல்லாம் பலர் பாராட்டி உள்ளனர்," என்று சொல்லும் ரெஜினா, தற்போது தமிழில் மட்டும் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இதனால் தினமும் ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி உள்ளதாம். கொரோனா காலம் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறார்.
"அண்மையில் மும்பை சென்றிருந்தேன். இணையத் தொடருக்கான படப்பிடிப்பு அங்கு நடைபெற்றபோது கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் மிகுந்த கண்டிப்பும் கெடுபிடியும் காட்டினர்.
"மும்பையில் இப்போது இடைவிடாமல் பணியாற்றுகிறார்கள். படப்பிடிப்புத் தளங்களில் தினமும் நான்கைந்து முறை அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் இடைவேளையிலும்கூட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தொடக்கத்தில் சற்றே சலிப்பும் எரிச்சலும் ஏற்பட்டது.
"ஆனால், மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்த பிறகு ஒருவருக்குக்கூட கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று தெரிய வந்தபோது நிம்மதியாக உணர்ந்தேன். அப்போதுதான் அவர்கள் காட்டிய கெடுபிடிக்கான காரணமும் பலனும் தெரிய வந்தது," என்று சொல்லும் ரெஜினா, தொடர்ந்து தன்னை ரசிகர்கள் சவாலான கதாபாத்திரங்களில் பார்க்க முடியும் என்கிறார்.
, :
ரெஜினா

