திருமணத்திற்கு முன்பு காஜல் அகர்வால் விஜய், சூர்யா, அஜீத், ராம் சரண் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். அண்மையில் இவருக்குத் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவருக்கு முன்புபோல வாய்ப்புகள் வராததால் மூத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கத் தொடங்கி இருக்
கிறார். இந்தக் காரணத்தால்தான் நடிகைகள் திருமணத்தைத்
தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார்கள் என்கிறது திரைஉலகம்.
தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவருக்கு முன்புபோல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
திருமணமாகிவிட்டாலே நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகிவிடும். இந்நிலையில்
திருமதி ஆன பிறகு காஜல்
அகர்வால் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் படங்கள் குறித்து அவரது ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மூத்த நடிகரான நாகார்ஜுனாவை வைத்து பிரவீன் சத்தாரு இயக்கும் படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். விரைவில் அந்தப் படத்தின் படப்
பிடிப்பில் கலந்துகொள்ள இருக்
கிறார்.
இந்நிலையில் அந்தப் படத்தில் நடிப்பது பற்றி காஜல் அகர்வால் பேட்டி ஒன்றில் கூறியபோது, "தெலுங்குத் திரையுலகில் என்
பயணம் சிறப்பாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் என் மீது பாசமாக இருக்கிறார்கள். நான் பிரவீன் சத்தாரு இயக்கத்தில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க இருக்கிறேன். என் வாழ்க்கையில் இதுதான் மிகவும் சிறந்த கதாபாத்திரமாக இருக்கப்போகிறது.
"படப்பிடிப்பில் கலந்துகொள்ள
காத்துக் கொண்டிருக்கிறேன். சிறுவயதில் இருந்தே எனக்கு நாகார்ஜுனா மீது ஆசை. இந்நிலையில் அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
"நான் டோலிவுட்டில் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் இதுவரை நடிக்காததால் இந்தப் படம் எனக்கு வேறு ஓர் அனுபவத்தைக் கொடுக்கும்," என்றார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள 'ஆச்சார்யா' படம் மே மாதம் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நண்பர் ராம் சரணுக்காக அவர் அப்பாவுக்கு ஜோடியாக 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் காஜல்.
மேலும் தமிழில் காஜல் அகர்வால் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வந்த 'இந்தியன் 2' படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
அதனால் 'இந்தியன் 2' படம் கைவிடப் பட்டதாக பேச்சு கிளம்பியது. இந்த நேரத்தில்தான் காஜல் புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
"இந்தியன் 2' படத்தில் வேலை பார்ப்பவர்களில் பலர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். கொரோனா நோய்த் தொற்று காரணத்தால் அவர்களால் பயணம் செய்ய முடியவில்லை. அனைவரும் அமெரிக்காவில் மாட்டிக்கொண்டு விட்டார்கள். அதனால்தான் படப்பிடிப்பை மீண்டும் துவங்காமல் இருக்கிறார்கள்," என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்க காஜல் களரி என்ற நாட்டுப்புறக் கலையை மிகவும் சிறமப்பட்டு ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

