திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
c0707e80-e358-4def-863f-4d8feaaf03f2
-
multi-img1 of 3

அப்பா மகள் உறவைச் சொல்லும் படத்தில் தந்தையாக கிஷோர்

தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர் என அழைக்கப்படுபவர் நடிகர் கிஷோர். இவர் தற்போது அறிமுக இயக்குநர் திரவ் இயக்கும் 'ராஜாவுக்கு ராஜாடா' என்ற படத்தில் அப்பா வேடத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் அப்பா மகள் உறவை அழகாக சொல்லும் ஓர் இசைத்திரைப்படமாக உருவாக இருக்கிறது. இதற்கு முன்னால் தேசிய விருதை வென்ற 'குற்றம் கடிதல்' படத்தில் இணை இயக்குநராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் திரவ். மேலும் இவர், ஜோதிகா நடிப்பில் உருவான 'மகளிர் மட்டும்' படத்தில் திரைக்கதையில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

23ஆம் தேதியைக் குறி

வைக்கும் 'தலைவி'

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' பற்றிய செய்திகளை அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய் அறிவித்து உள்ளார். அதன்படி வரும் 23ஆம் தேதி செவ்வாய்க் கிழமையன்று இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதியன்று படமும் வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார். ஏன் இந்த 23 என்று கேட்டால் இம்மாதம் வரும் 23ஆம் தேதிதான் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருக்கும் கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளாம். இந்தப் படத்திற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்து பின்னர் உடல் எடையைக் குறைக்க அதிகம் சிரமப்பட்ட கங்கனாவிற்கு செய்யும் நன்றிக் கடனாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிரசாந்தின் 'அந்தகன்'

படப்பிடிப்புத் தொடங்கியது

கடந்த 2018ஆம் ஆண்டில் மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற இந்தித் திரைப்படம் 'அந்தாதுன்'. இந்தப் படத்தின் தமிழ் மறுபதிப்பை நடிகர் தியாகராஜன் பெற்று, அந்தப் படத்திற்கு 'அந்தகன்' என்று பெயரிட்டு, தன்னுடைய மகன் பிரசாந்தை நாயகனாக நடிக்க வைத்து, அவரே படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்ரன் பிரசாந்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. அப்போது இந்தப் படத்தில் மற்றொரு நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரன்வீரை அந்நியனாக்கிய ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் உலக நாயகன் கமலை வைத்து 'இந்தியன் 2' படத்தை இயக்க இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, ஊரடங்கு போன்ற காரணங்களால் சில தடைகளை சந்தித்து, 'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கமல் தேர்தல் வேலைகளில் இறங்கி விட்டதால் மீண்டும் இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று தெரியாததால் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். தில்ராஜூ தயாரிக்கும் பெயரிடப்படாத அந்தப் படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தெலுங்குப் படத்தைத் தொடர்ந்து ரன்வீர் சிங்கை வைத்து 'அந்நியன்' படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்ய இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். விரைவில் இந்தி அந்நியனாக காட்சியளிப்பார் ரன்வீர் சிங்.