சின்னத்திரை மூலம் பிரபலமான ரியோ நாயகனாக நடித்துள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் படம் உருவாகி உள்ளது.
கொரோனா விவகாரம் தலைதூக்கவில்லை என்றால் இந்நேரம் இப்படம் திரைகண்டிருக்கும். எனினும் சுவாரசியமான கதை, திரைக்கதையுடன் உருவாகியிருப்பதால் எப்போது வெளியீடு கண்டாலும் ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்கிறார் ரியோ.
"ஒரு கதாபாத்திரத்தை எப்படி அணுக வேண்டும் என எனக்குள் சில விதிமுறைகளை வகுத்துள்ளேன். பல ஆண்டுகளாக அப்படித்தான் எனக்கான கதாபாத்திரங்களை அணுகுகிறேன்.
"ஒரு படத்தில் கதாநாயகனின் சாகசங்களை சித்திரிப்பதற்கு இணையாக நகைச்சுவை அம்சமும் இருக்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியும் என்ற விதிமுறையில் எனக்கு நம்பிக்கை இல்லை.
"எப்போதுமே கதாநாயகனின் சாகசங்களைவிட கதைதான் முக்கியம் எனக் கருதுகிறேன்.
"அதே சமயம் ஒரு கதாநாயகனை எவ்வாறு திரையில் வெளிப்படுத்த வேண்டும், எந்தளவுக்கு நாயகனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது இயக்குநரின் முடிவாக இருப்பதே நல்லது.
"எனவே அவரை நம்பி நம்மை ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனம்," என்கிறார் ரியோ.
இவர் சொல்வதை தாம் ஆமோதிப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். இந்தப் படத்திலும் கதைக்கு முக்கியத்துவம் தருமாறுதான் ரியோ தொடக்கம் முதல் வலியுறுத்தி வந்தாராம். ஆனால் அதை ஏற்காமல் நாயகனை முன்னிலைப்படுத்துவது என தாம் முடிவெடுத்ததாக பத்ரி கூறுகிறார்.
"இந்தப் படம் ரியோவின் கதாபாத்திரத்தை மட்டும் மையப்படுத்தி உருவாகவில்லை. படத்தின் முதல் பாதியில் பாலசரவணனை மையப்படுத்தி கதை நகரும். பின்னர் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.
"ரியோவின் நகைச்சுவை குறித்து அனைவருக்கும் தெரியும். இதில் அவருக்குப் போட்டியாக பாலசரவணன், முனீஷ்காந்த், எம்.எஸ். பாஸ்கர், ரோபோ சங்கர் என்று மேலும் பலர் நகைச்சுவையால் வயிறு குலுங்க வைப்பார்கள். இவர்களுக்கு இடையேயான போட்டி ரசிகர்களை மகிழ்விக்கும்," என்கிறார் பத்ரி வெங்கடேஷ்.
ரியோவின் நடிப்பு இந்தி நடிகர் ஷாருக்கான், தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரது கலவையாக உள்ளது என்று பாராட்டுபவர், அனைத்து வகையிலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஆற்றல் மிகுந்தவர் ரியோ என்று சிலாகிக்கிறார்.
அதைக் கேட்டு புன்னகைக்கும் ரியோ தாம் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்திலேயே இப்படியொரு பாராட்டு கிடைப்பது மகிழ்ச்சி அளித்தாலும் மற்றொரு பக்கம் பயமாக இருக்கிறது என்றும் சொல்கிறார்.
"என்னைவிட சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு வாய்ப்புகள் கிடைப்பது என் அதிர்ஷ்டம். இந்தத் தருணத்தில் சிவகார்த்திகேயன் சார் கூறிய அறிவுரைதான் நினைவுக்கு வருகிறது.
"நாம் வளரும்போது நிறைய அறிவுரைகள் தேடிவரும். பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைப்பர். அவை அனைத்தையும் பின்பற்றுவது சரியாக இருக்காது. 'நம் உள்ளுணர்வுதான் நாம் தற்போது நிற்கும் இடத்துக்கு நம்மை அழைத்து வந்திருக்கிறது. எனவே, உள்ளுணர்வு சொல்லும்படி நடந்துகொள்ள வேண்டும்,' என்று சிவா கூறியுள்ளார். அப்படித்தான் செயல்பட்டு வருகிறேன்," என்கிறார் ரியோ. 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் வெளியீடு தாமதமானாலும் தனது தன்னம்பிக்கை சிறிதளவும் குறையவில்லை என்று குறிப்பிடுபவர், தரமான படைப்புகளுக்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என அடித்துச் சொல்கிறார்.

