ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ளது 'பேச்சுலர்'. சதீஷ்குமார் இயக்கியுள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று கணிசமான விலை கொடுத்து வாங்கியுள்ளது.
அண்மைய சில ஆண்டுகளாக ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
குறைந்தபட்ச லாபமேனும் கிடைப்பதால் ஜி.வி.யை நம்பி பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தைரியமாகக் களமிறங்குகின்றனர்.
மேலும் தனக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் தாம் நடிக்கும் படங்களுக்கு அவரே இசையமைக்கவும் செய்கிறார். அது படத்தின் வியாபாரத்துக்கும் வெற்றிக்கும் கூடுதல் பலம் சேர்க்கிறது.
இந்நிலையில் அறிமுக இயக்குநர்களுக்கும் வாய்ப்பளிக்கிறார் ஜி.வி. அந்த வகையில் புது இயக்குநரான சதீஷ்குமார் இயக்கத்தில் நடித்துள்ள படம்தான் 'பேச்சுலர்'.
அண்மையில் வெளியீடு கண்ட இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு இணையத்தில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
"இன்றைய நாகரிக உலகில் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்வதைப் பலர் சாதாரணமான விஷயமாகக் கருதத் தொடங்கிவிட்டனர். இந்த விவகாரத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது 'பேச்சுலர்'.
"இதனால் இளையர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். ஜி.வி. பிரகாசுக்கு ஜோடியாக பிரபல மாடல் அழகி திவ்யபாரதி நடித்துள்ளார். அவருக்கும் இது அறிமுகப் படம்தான்.
"மேலும் முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்க டில்லி பாபு தயாரித்துள்ளார்," என்கிறார் இயக்குநர் சதீஷ்குமார்.
இது உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் படங்கள் கோடம்பாக்கத்தில் வெளியீடு காண உள்ளன. எனவே, அவற்றின் வெளியீட்டுத் தேதிகளுக்கு ஏற்ப 'பேச்சுலர்' படம் எப்போது வெளியாகும் என தீர்மானிக்கப்படும் எனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.