'வேட்டையனாக' ராகவா லாரன்ஸ்
ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'சந்திரமுகி'. பி.வாசு இயக்கியிருந்தார். இந்நிலையில், மீண்டும் பி.வாசு 'சந்திரமுகி 2' படத்தை எடுக்க இருக்கிறார்.
தற்பொழுது 'ருத்ரன்' படப்பிடிப்பில் இருக்கும் ராகவா லாரன்ஸ், ரஜினி நடித்த வேடத்தில் 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது படத் தயாரிப்பு.
'சந்திரமுகி' படத்தில் மனோதத்துவ மருத்துவர் வேடத்தில் வேட்டையன் பங்களாவிற்குள் செல்வார் ரஜினி. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் அதே பங்களாவிற்குள் ஒரு புதிய குடும்பம் செல்வதும் அதன்பிறகு வேட்டையன் உள்ளே வருவது போன்றும் கதை வருகிறதாம். அந்த வகையில் 'சந்திரமுகி 2' படம் முழுவதும் வேட்டையனாகவே நடிக்கிறாராம் ராகவா லாரன்ஸ்.
'ஓடிடி' தளத்திற்கு படம் இயக்கும் பாலா
தமிழ்த் திரையின் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. தனித்துவமான தனது படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்தவர். ஆனால் 18 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'பிதாமகன்' படத்திற்குப் பிறகு முழுமையான வெற்றியை அவர் பெறவில்லை.
'நான் கடவுள்', 'பரதேசி' படங்கள் பாராட்டுகளைப் பெற்றபோதும் வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவிய படங்கள். 'அவன் இவன்', 'தாரை தப்பட்டை', 'நாச்சியார்' படங்களும் தோல்வியைச் சந்தித்தன. இறுதியாக தெலுங்கில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' படத்தை நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிக்க 'வர்மா' என்ற பெயரில் மறுபதிப்பு செய்தார்.
அந்தப் படம் விக்ரமிற்கே பிடிக்காமல் போக வேறு ஒரு இயக்குநரை வைத்து 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் மீண்டும் படத்தை எடுத்து வெளியிட்டார் விக்ரம். பாலா இயக்கிய வர்மா படத்தை தயாரிப்பாளர் 'ஓடிடி' தளத்தில் வெளியிட்டார். "பாலாவுக்கு என்னாச்சு?" என்ற விமர்சனம்தான் அந்தப் படத்திற்கு கிடைத்தது.
இப்படி படிப்படியாக சரிந்த தன் செல்வாக்கை சரிக்கட்ட முன்னணி நடிகர்களை வைத்து அடுத்து ஒரு படம் இயக்க முயற்சி செய்தார் பாலா. ஆனால், அவரால் வளர்ந்த நடிகர்களே அவரைத் தவிர்க்கத் தொடங்கினர். அதனால் தற்பொழுது பாலா 'நெட்பிளிக்ஸ்' தளத்திற்காக ஒரு படம் இயக்க முன்வந்திருக்கிறார்.

